நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில்  ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் பயணித்த அந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரது மனைவியும் பயணித்தனர். இதில் பிபின் ராவத்தும், அவரது மனைவியும் துர்திஷ்டவசமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். 14  பேர் பயணித்த நிலையில் 13 பேர் உயிரிழந்தனர்.


 


யார் இந்த பிபின் ராவத்?


“எதிரிகள் நம்மைக் கண்டு பயப்படுவதுபோல, மக்களும் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டும்” என்று பேசியவர் பிபின் ராவத். 




“இந்தியாவின் படைகளே இந்தியாவின் பெருமிதம். முப்படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு பற்றிய முக்கியமான முடிவு ஒன்றை செங்கோட்டையிலிருந்து அறிவிக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கு தனியாக `முப்படைகளின் தலைமைத் தளபதி' என்ற பதவி உருவாக்கப்படும். இது, நமது படைகளை சிறப்பாகச் செயலாற்ற வைக்கும்” என்று கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழா உரையில் பேசினார், பிரதமர் நரேந்திர மோடி. அதேபோல், டிசம்பர் மாதம் பிபின் ராவத் முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார். 


இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டவர் பிபின் ராவத். இதற்கான கால வரம்பு 65 வயதாகும். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியொடு ராணுவ தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், ஒருநாள் முன்னதாக டிசம்பர் 30ஆம் தேதியே முப்படைக்கும் தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். 




ஜெனரல் பிபின் ராவத் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்டு பள்ளியில், ஆரம்ப கால படிப்பை முடித்தார். ராணுவத்தின் மீதான ஆர்வத்தால், கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து ராணுவ பயிற்சி பெற்றார். வெலிங்டனில் ராணுவ சேவை கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பை முடித்தார்.


பின்னர் 1978-ஆம் ஆண்டு, இந்திய ராணுவத்தின் 11-வது கூர்கா ஆயுதப் படையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்திய - சீன எல்லைப் பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றி, தேர்ந்த அனுபவத்தை பெற்றார் பிபின் ராவத். காங்கோ நாட்டிற்கு சென்று சர்வதேச ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய பிபின் ராவத், அங்கு படைகளுக்கு தலைமை தாங்கினார். கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதி ராணுவ தளபதி பொறுப்புக்கு வந்தார். 


இதனிடையே ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பையும் பிபின் முடித்துள்ளார்.


தனது தந்தை பணியாற்றிய அதே படையில், 1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார் பிபின் ராவத். உயர்ந்த மலைகளின்மீது போர் புரிதலிலும், ஆட்சிக்கு எதிரான ஆயுதக்குழுக்களை ஒடுக்குவதிலும் கை தேர்ந்தவர்.




2008-ம் ஆண்டு, காங்கோ நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பப்பட்ட அமைதிக்குழுவில், இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகச் சென்றார். அவரது தலைமையின் கீழ் அமைதிக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டதாகவும், அதுவரை அமைதியாக இருந்த இந்தியாவின் அணுகுமுறை, அவரின் தலைமைக்குப் பின் இரும்புக்கரம் கொண்டதாக மாறியதாகவும் அந்த அமைதிக்குழுவில் இருந்தவர்கள் அவரைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.


அதேசமயம் பல சர்ச்சை மிகுந்த கருத்துக்களை தெரிவித்தும் பிபின் ராவத் கண்டனங்களை பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டு, ``காஷ்மீரில் இந்த மக்கள் எங்கள் மீது கல் வீசுகிறார்கள்; கல்லுக்குப் பதிலாக, ஆயுதங்கள் ஏதேனும் வீசட்டுமே. அப்போது நாங்கள் யாரென்று அவர்களுக்குத் தெரியும்" என்று பேர் சர்ச்சையை ஏற்படுத்தினார். 


அதேபோல், 2018-ம் ஆண்டு, பெண் ராணுவத்தினருக்கு போர்களில் ஈடுபடுவது குறித்த நேர்காணலின்போது, பிபின் ராவத் பேசிய ஒவ்வொன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ``நமது வீரர்கள், கிராமங்களிலிருந்து வருபவர்கள். அவர்களோடு முகாம்களுக்கு பெண் ராணுவத்தினரை அனுப்ப முடியாது. அவர்கள், அதற்குத் தயாராக இல்லை. அவர்களுக்குத் தனி டென்ட் கொடுத்தால், யாராவது எட்டிப் பார்க்கிறார்கள் என்று புகார் செய்வார்கள். டெல்லியிலேயே பெண்கள் இதுபோன்று கூறுகிறார்கள். முகாம்களில், 100 ராணுவ வீரர்கள் தன்னைச் சுற்றியிருக்கையில் இப்படியான பிரச்னைகள் எழும்" என்றார் பிபின் ராவத்.


குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக பிபின் ராவத் “போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் தலைவர்களே இல்லை” என அரசியல் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.