கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் பல உதவிகளை செய்தவராக அறியப்பட்டவர் நடிகர் சோனு சூட். இதன் காரணமாக அவர் நாட்டில் பெரும்பாலானோர் ரியல் ஹீரோவாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அவையெல்லாம் ஒரு பி.ஆர் வேலைதான் என்னும் ரீதியில் சர்ச்சைகளும் எழுந்தன.


இந்நிலையில், தனது தங்கை மாளவிகா சச்சார் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மோகாவில் இருக்கும் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனது சகோதரி மாளவிகா சூட் பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்வார். அவர் எந்த அரசியல் கட்சியுடன் செல்வார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அந்த முடிவு சரியான நேரத்தில் வெளியில் கூறப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்கான அவரது அர்ப்பணிப்பு இணையற்றது. ஆனால் ஒரு அரசியல் கட்சியில் சேரும்போது அது வாழ்க்கையின் ஒரு பெரிய முடிவு” என்றார்.


தங்கைக்கு அடுத்ததாக நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலில் மாளவிகாவை ஆதரிப்பது முக்கியம். எனது திட்டங்கள் குறித்து பின்னர் கூறுகிறேன். மாளவிகாவின் முதன்மைப் பணியாக ஆரோக்கிய பராமரிப்பு இருக்கும். மக்கள்  பணிக்கு அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக அவற்றைப் பெறுவதை அவர் உறுதி செய்வார். மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் அவர் பேசுவார். “பஞ்சாபில் உள்ள இளைஞர்கள் வேலை கிடைக்காமல், வேலையில்லாமல் இருக்கும்போதுதான் போதைப்பொருளுக்கு அடிமையாகிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்பதற்கான பணிகளில் நாங்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோம்” என்றார்


சோனு சூட்டின் கூற்றுப்படி, மாளவிகா மோகா தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. முன்னதாக சோனு சூட், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியை சந்தித்தார்.


அதுமட்டுமின்றி ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட பிற அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளி முதல்வர் அதிரடி கைது


Explainer: படிக்க அனுப்புறோம்.. உசுரக் கொடுக்க அல்ல.. பாலியல் வன்முறைக் களமாகும் பள்ளிகள்...காரணம் என்ன?