மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இந்த வருடத்திலேயே சென்னை கேகேநகர் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்த், , சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த பதைபதைப்புகள் அடங்குவதற்குள் கோவை சின்மயா வித்யாலயாவை சேர்ந்த பள்ளி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சின்மயா பள்ளியில் படித்தபோது, இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து வந்ததாக கூறப்படுகிறது.. இதனாலேயே அந்த பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாறியதாகவும், கடந்த 6 மாத காலமாக கடுமையான மன உளைச்சளுக்கு மாணவி உள்ளானதாகவும் அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்கள்.


தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மாணவி ஏற்கெனவே தனது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்   புகாரளித்துள்ளார். ஆனால் மாணவி மீதும் தவறு இருப்பதாக முதல்வர் கூறியுள்ளார். பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் தனது பெற்றோர் உட்பட யாரிடமும் இது பற்றி சொல்ல வேண்டாம் என்றும் சொல்லி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் சொல்லியும் மாணவியை அனுப்பியுள்ளார். ஆனால் அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து அதே பள்ளிக்கு செல்வதால் மனவுளைச்சலுக்கு  உள்ளான மாணவி வேறு பள்ளிக்கு மாறியுள்ளார். ஆனாலும் மாணவியின் மன அழுத்தம் குறையவில்லை. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் அந்த 17 வயது மாணவி. பாலியல் தொல்லை பற்றி மாணவி புகார் அளித்தபோதும் பள்ளி முதல்வராக இருந்த மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்கவில்லை, மிதுன் சக்கரவர்த்தி செய்த குற்றத்திற்கு துணை போயிருக்கிறார் 




இப்படி கல்விக்கூடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் சமீப காலமாகவே வெளிச்சத்திற்கு வருகின்றன.  குழந்தைகளின் பாலியல்ரீதியான வன்முறைகளைப் பொறுத்தவரை, உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், ஒவ்வொரு 155 நிமிடத்திற்கும், 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வன்புணர்வுக்கு ஆளாகிறது


இப்படித்தான் கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவர் 98 மாணவிகளை பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். பல மாணவிகள் பிற ஆசிரியர்களிடம் புகார் சொல்லிய போதும், யாரும் தலைமை ஆசிரியர் பற்றி புகார் செய்யவில்லை. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தபோது இது நாட்டையே உலுக்கியது. 


கல்விக்கூடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மாணவிகளால் பெரும்பாலும் வெளியே சொல்லப்படுவதில்லை.  அப்படியே மாணவிகள் முன்வந்து சொன்னாலும் பள்ளி நிர்வாகங்கள் முறையாக விசாரணை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இது ஒரு புறமிருக்க குழந்தைகளின் எதிர்க்காலம், குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டு விடும் உள்ளிட்ட காரணங்களால் இதை பற்றி வெளியே சொல்லுவதில்லை எனவும் கூறப்படுகிறது. 




குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டதே போக்சோ சட்டம். . இச்சட்டத்தின் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை 3மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து தண்டனை வழங்க வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் அப்படி நடப்பதில்லை. மதுரை மாவட்டம் பொதும்பு பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 2017ல்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது 7 ஆண்டுகளுக்கு பிறகு.  ஏழு ஆண்டு காலத்தில் பல மாணவிகள் தங்களின் பாதுகாப்பு கருதி புகாரை திரும்ப பெற்றனர். ஒரு சிலருக்கு திருமணம் ஆகிவிட்டதால் வழக்கை தொடர அவர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. 


தேசிய குற்றப்பதிவு ஆவணத்தின்படி இந்தியா முழுவதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 2017 முதல் 2019 காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது. அதோடு புகார்கள் பெறப்பட்டாலும், காவல்துறை நடத்தும் விசாரணையுடன் அந்த புகார்கள் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அந்த புகார்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்படுவதில்லை என கூறப்படுகிறது. இந்தியாவில் தினமும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது.


 எல்லா பாலியல் துன்புறுத்தல்களும் மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றன திடீரென்று நடப்பவை அல்ல, எனவே குழந்தைகளை மன ரீதியாக தயார்ப்படுத்துவது, குழந்தைகள் தனக்கு நேர்ந்ததை சொல்லும் அளவுக்கு அவர்களோடு நட்பாய் இருப்பது ஆகியவை பெற்றோர்களின் கடமை என குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். சட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை அரசும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள்.