நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில், இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். 


56 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல்:


இரண்டாவது மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். 


கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவையில் பெரும் பங்காற்றிய 12 பேர், குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களவை உறுப்பினர்களில் 68 பேரின் பதவிக்காலம் இந்தாண்டு நிறைவடைய உள்ளது. அதில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. 


14 மாநிலங்களவை இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என். சிங், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுதன்ஷு திரிவேதி, உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் ஆகியோர் பாஜக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


காங்கிரஸ் போட்ட பக்கா ஸ்கெட்ச்:


இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு அவர் போட்டியிட உள்ளார்.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. உடல்நிலை காரணமாக சமீப காலமாக தேர்தல் பிரச்சாரத்தை தவிர்த்து வருகிறார் சோனியா காந்தி. எனவே, மக்களவைக்கு பதில் அவரை மாநிலங்களவை தேர்தலில் களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டு வந்தது.


ராஜஸ்தானிலிருந்து அவர் மாநிலங்களவைக்கு போட்டியிட வேண்டும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தோதசரா கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோன்ற கோரிக்கைகளை மத்திய பிரதேச, தெலங்கானா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் முன்வைத்திருந்தனர்.


மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட உள்ள நிலையில், தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள ரே பரேலி தொகுதியில் அவருக்கு பதில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரே பரேலி தொகுதியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.


இதையும் படிக்க: MSP: விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த காங்கிரஸ்.. ராகுல் காந்தியின் முதல் தேர்தல் வாக்குறுதி!