அடுத்த மாத இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது.


காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் வாக்குறுதி:


டெல்லியின் எல்லை பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி ஓராண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்பது, விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கிய போராட்டத்தை விவசாய அமைப்புகள் அறிவித்தன.


தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இது மத்திய பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது. விவசாய சங்கங்கள், மத்திய அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. 


விவசாயிகளுக்கு ராகுல் காந்தி தந்த சர்ப்ரைஸ்:


இந்த நிலையில், மத்தியில் ஆட்சி அமைத்தால் சுவாமிநாதன் ஆணையம் வழங்கிய பரிந்துரையின்படி, விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.


 






இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிடுகையில், "விவசாய சகோதர சகோதரிகளே, இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி, அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உத்தரவாதமாக அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை 15 கோடி விவசாயக் குடும்பங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். நீதியின் பாதையில் காங்கிரஸின் முதல் உத்தரவாதம் இதுதான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதையும் படிக்க: Farmers' Protest 2.0: பரபரப்பாகும் டெல்லி: பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு