மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிரிஞ்சை பயன்படுத்தி 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிரிஞ்சை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதியை மீறி அந்த நபர் செயல்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திரா, அதிகாரிகளால் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே அனுப்பப்பட்டதாகவும், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுமாறு துறைத் தலைவர் உத்தரவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். ஒரே சிரிஞ்சை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்துவதை மாணவர்களின் பெற்றோர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
மாணவர்களின் பெற்றோர் பதிவு செய்த காணொளியில், ஜிதேந்திரா தனது பெயரை சொல்ல மறுத்துள்ளார். எச்.ஐ.வி பரவத் தொடங்கியதிலிருந்து, அதாவது 1990களில் இருந்து ஒரு முறை மட்டுமே சிரிஞ்சை பயன்படுத்த வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்தது.
இதுகுறித்து ஜிதேந்திராவிடம் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியபோது, பொருட்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்ததாக பதில் அளித்துள்ளார். இதுவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல நபர்களுக்கு ஊசி போட ஒரே ஊசி பயன்படுத்தப்படக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு, "எனக்கு அது தெரியும். அதனால்தான் நான் ஒரு ஊசியைப் பயன்படுத்த வேண்டுமா என்று மற்ற அலுவலர்களிடம் கேட்டேன். அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். இது எப்படி என்னுடைய தவறாக இருக்க முடியும்? நான் என்ன செய்ய வேண்டும் என சொன்னார்களோ அதை செய்துள்ளேன்" என ஜிதேந்திரா பதில் அளித்துள்ளார்.
அலட்சியமாக செயல்பட்டதாகவும் அப்பட்டமாக விதிகளை மீறியதற்காகவும் ஜிதேந்திரா மீது சாகர் நகர நிர்வாகம் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. தடுப்பூசி மற்றும் தேவையான பிற பொருட்களை அனுப்பும் பொறுப்பில் இருந்த மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர் டாக்டர் ராகேஷ் ரோஷன் மீதும் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சாகர் நகரில் உள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. சம்பவம் நடைபெற்றதையடுத்து, தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலரை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ஷிதிஜ் சிங்கால் உடனடியாக உத்தரவிட்டார். ஆனால், ஆய்வின் போது ஜிதேந்திரா அங்கு இல்லை. சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து அவரது தொலைபேசியும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்