தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள கோடாட் என்ற இடத்தில் 15 வயது சிறுவன் கஞ்சா பயன்படுத்தியதற்காக சிறுவனின் தாய், மகனை கம்பத்தில் கட்டி வைத்து கண்ணில் மிளகாய் பொடி தூவிய வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
தனது 15 வயது மகன் கஞ்சாக்கு அடிமையாக மாறியதைக் கண்டு கவலைப்பட்ட அந்த சிறுவனின் தாய், அவனைக் கம்பத்தில் கட்டிவைத்துள்ளார். தொடர்ந்து, கோவத்தில் இருந்த சிறுவனின் தாய் அதோடு நிற்காமல், வேறொரு பெண்ணை மகனின் கைகளை இறுக பிடிக்க சொல்லி, தான் கொண்டுவந்த மிளகாய் பொடியை எடுத்து மகனின் முகம் முழுவதும் தேய்த்துள்ளார்.
மிளகாய் பொடி ஏற்படுத்திய எரிச்சல் காரணமாக அந்த சிறுவன் கதறி கதறி அழுத வீடியோவை நாம் இங்கு காண முடிகிறது. தொடர்ந்து, மிளகாய் பொடி தேய்த்த சிறிது நேரத்தில் சிறுவனின் தாய் அங்கிருந்து நகர்ந்துவிட, சிறுவன் கதறி துடித்துள்ளார். இதையடுத்து, சிறுவன் " தான் இனிமேல் கஞ்சாவை பயன்படுத்தமாட்டேன் என்றும், மேலும், எந்தவொரு தவறான காரியத்தில் ஈடுப்பட மாட்டேன் என்றும் அனைவரும் முன்னிலையிலும் எரிச்சல் தாங்க முடியாமல் சத்தியம் செய்துள்ளார். மேலும், தண்ணீரை தன் முகத்தில் ஊற்றுமாற்று அக்கபக்கத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து, அந்த சிறுவனின் தாயாரிடம் அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, மகனும் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதாக உறுதியளிக்கவே, அந்த பெண் தனது மகனின் கட்டைகளை அவிழ்த்துள்ளார்.
குழந்தைகளை தண்டிக்க பெற்றோர்கள் குழந்தைகளின் கண்களில் மிளகாய் பொடியை தேய்ப்பது புதிதல்ல என்றாலும், இந்த பழைய முறை மிகவும் ஆபத்தானது என்று சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு காவல்துறையினர் வைக்கும் வேண்டுகோள் :
காவல்துறையின் கூற்றுப்படி, சமீப காலமாக பல இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி, குற்றச் செயல்களிலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருளுக்கு இரையாக வேண்டாம் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுக்க காவல்துறையை அணுகவும் அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்