கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள் 2019-20 நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு ரூ. 921.95 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும்,  இதில் பாஜக அதிகபட்சமாக ரூ. 720.407 கோடியைப் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேசிய கட்சிகளுக்கு பெற்ற நன்கொடை 109 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 


ஒரு நிதியாண்டில் 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்த நன்கொடையாளர்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி (BJP), இந்திய தேசிய காங்கிரஸ் (INC), தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP), அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (AITC) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (CPM) ஆகிய ஐந்து கட்சிகள் பெற்ற நன்கொடைகள் அடிப்படையில் பகுப்பாய்வுகள் வெளியிடப்பட்டுள்ளது. 


அறிக்கையின்படி, ஐந்து தேசியக் கட்சிகளில், 2019-20 நிதியாண்டில் 2,025 கார்ப்பரேட் நன்கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக ரூ.720.407 கோடி நன்கொடைகளை பாஜக பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் 154 நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.133.04 கோடியைப் பெற்றுள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 36 பெருநிறுவன நன்கொடையாளர்களிடமிருந்து 57.086 கோடி ரூபாயை பெற்றுள்ளது. 







அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் 2019-20 ஆம் ஆண்டிற்கான கார்ப்பரேட் நன்கொடைகளிலிருந்து நன்கொடை எதுவும் பெறவில்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அதே ஆண்டில், பிஜேபி மற்றும் காங்கிரஸுக்கு ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் அதிக நன்கொடை அளிப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்த அறக்கட்டளை ஒரே ஆண்டில் இரு கட்சிகளுக்கும் தலா 38 முறை மொத்தம் ரூ.247.75 கோடி நன்கொடை அளித்துள்ளது. 


"பிஜேபி ரூ. 216.75 கோடியும், காங்கிரஸ் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்டிடமிருந்து ரூ. 31.00 கோடியும் பெற்றதாகவும், பி ஜி ஷிர்கே கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் 2019-20ல் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அதிக நன்கொடை அளிப்பதாக இருந்தது.


2012-13 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில், தேசியக் கட்சிகள் 2019-20ல் அதிகபட்ச கார்ப்பரேட் நன்கொடையாக ரூ.921.95 கோடி பெற்றுள்ளன.(17வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது). அதைத் தொடர்ந்து 2018-19ல் ரூ.881.26 கோடியும், 2014-15ல் ரூ.573.18 கோடி (16வது மக்களவைத் தேர்தல்) என்று அந்த அறிக்கை கூறுகிறது.




2012-13 மற்றும் 2019-20 க்கு இடையில் வழங்கப்பட்ட மொத்த நிறுவன நன்கொடைகளில் 2019-20 இல் பெறப்பட்ட கார்ப்பரேட் நன்கொடைகள் 24.62 சதவீதமாகும். 2012-13 மற்றும் 2019-20 க்கு இடையில், கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து தேசிய கட்சிகளுக்கு நன்கொடைகள் 1,024 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


கார்ப்பரேட்/வணிக நிறுவனங்களின் பங்களிப்புகள் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தினால் 15 துறைகள்/வகைகளாகப் பிரிக்கப்பட்டன. துறைகளில் அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களின் குழு, உற்பத்தி, ஆற்றல் மற்றும் எண்ணெய், சுரங்கம், கட்டுமானம், ஏற்றுமதி/இறக்குமதி மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவை அடங்கும்.


2019-20 நிதியாண்டில் ஐந்து தேசியக் கட்சிகளுக்கு கார்ப்பரேட்/வணிக நிறுவனங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட மொத்த ரூபாய் 921.95 கோடியில், ஆன்லைனில் கிடைக்காத விவரங்கள் உள்ளடக்கிய பிரிக்கப்படாத பிரிவில் இருந்து ரூ.22.312 கோடி பெறப்பட்டதுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 


2019-20 ஆம் ஆண்டில், தேர்தல் அறக்கட்டளைகள் தேசியக் கட்சிகளுக்கு மிகப்பெரிய நன்கொடை அளித்து, மொத்தம் ரூ. 397.82 கோடி (சுமார் 43 சதவீதம்) பங்களித்தன. 2019-20 ஆம் ஆண்டில் மொத்த பங்களிப்பில் உற்பத்தித் துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. மொத்தத் தொகை ரூ 146.388 கோடியாக இருந்துள்ளது. 


2019-20 ஆம் ஆண்டில், பாஜக, காங்கிரஸ், AITC மற்றும் NCP ஆகியவை தேர்தல் அறக்கட்டளைகளில் இருந்து அதிகபட்ச நன்கொடைகளை பெற்றன. அதில், பாஜக அதிகபட்சமாக ரூ.323.32 கோடியும், இந்திய தேசிய காங்கிரஸ் (ரூ. 71.00 கோடி), ஏஐடிசி (ரூ. 2.00 கோடி) மற்றும் என்சிபி (ரூ. 1.50 கோடி) ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண