குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது. தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் நேற்று டெல்லியில் தகனம் செய்யப்பட்ட நிலையில், இன்று பிற வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டது.
விங் கமாண்டர் பிரித்விசிங் சவுகானின் உடல் அவரது சொந்த ஊரான ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்த இறுதிச்சடங்கின்போது விங் கமாண்டர் பிரித்விசிங் சவுகான் சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது அவரது விமானப்படை தொப்பி வைக்கப்பட்டிருந்தது.
அவரது சடலத்தின் அருகே ஏதுமே அறியாமல் நின்று கொண்டிருந்த அவரது ஏழு வயது மகன், மலர்கள் படர்ந்திருந்த அந்த தொப்பியை எடுத்து தலையில் அணிந்துகொண்டான். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சிங்கத்திற்கு பிறகு சிங்கக்குட்டி என்பது போல பிரித்வி சிங் சவுகான் மகன் அவிராஜ் தனது தந்தையின் ராணுவ தொப்பியை அணிந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவிராஜ் தனது தந்தையின் தொப்பியை அணிந்த பிறகு, அந்த தொப்பியை தனது மகளுக்கும் அணிவித்து தனது கணவர் புகைப்படம் முன்பு விங்கமாண்டர் சிவராஜ்சிங் சவுகான் மனைவி காமினி நின்றது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நான்கு அக்காக்களுடன் பிறந்த பிரித்விசிங் சவுகான் இந்திய விமானப்படையில் 2000ம் ஆண்டு இணைந்தார். 2007ம் ஆண்டு பிரித்விசிங் சவுகான் காமினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 12 வயதான ஆராத்யா என்ற மகளும், அவிராஜ் என்ற 7 வயதான மகனும் உள்ளனர். தனது சகோதரிகளுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடிய பிரித்விசிங் ஜனவரி மாதம் வீட்டிற்கு வருவதாக கூறிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்