டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் ஒரு மசூதிக்கு வெளியே இரண்டு மதச் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட  கைகலப்பில் போலீஸார் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறையில் காயமடைந்த டெல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மெடலால் மீனா, ஜஹாங்கிர்புரியில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே இரு சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது போலீசார் ஆரம்பத்தில் இரு சமூகங்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த முயன்றதாகக் கூறினார். 

கலவரம் ஏற்படாத வகையில் ஜஹாங்கிர்புரியில் அந்தப் பகுதி இந்துக்களின் அனுமன்  ஜெயந்தி ஊர்வலம் ஒரு வழியாக அனுப்பப்பட்டது, ஆனால் இஸ்லாமியர்களின் மசூதி அருகே அது வன்முறையாக தொடங்கியது.நேருக்கு நேர் ஏற்பட்ட இந்த மோதலில், இடையில் சமாதானம் ஏற்படுத்த முயன்ற போலீசார் சிக்கிக் கொண்டனர். இந்த வன்முறையில் 8 போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தனர். சப் இன்ஸ்பெக்டர் மெடலார் மீனா கையில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்த வழக்கில் இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் அஸ்லாம் என்பவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாவை சுட்டதாக போலீசார் கூறுகின்றனர். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தகராறில் ஈடுபட்ட அன்சார் என்ற மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மீனா ஊர்வலத்தின் பின்புறத்தில் பணியில் இருந்ததாகவும், ஆனால் வாக்குவாதம் தொடங்கியபோது முன்னால் வந்ததாகவும் கூறினார். "முன்னால் ஒரு வாக்குவாதம் தொடங்கியது, நான் அங்கு சென்றேன், அது சண்டையாக மாறியது, பின்னர் மசூதியின் முன் கல் வீசத் தொடங்கினார். ஆனால் போலீசார் இடைமறித்து இரு குழுக்களையும் பிரித்தனர்.

அனுமன் ஜெயந்தி ஊர்வல மக்கள் ஜி பிளாக் பக்கம் அனுப்பப்பட்டனர். பின்னர் அங்கிருந்து குஷால் சவுக்கை அடைந்தனர். பிறகு சி பிளாக் பக்கம் வந்தவர்கள் அங்கேயே நிறுத்தப்பட்டனர். பிறகு அமைதி நிலவியது. ஆனால் அதற்குப் பிறகு திடீரென அதிகமான ஒரு கூட்டம் கம்பிகள் மற்றும் வாளுடன் வந்தது, மேலும் அந்தக் கூட்டத்தினர் கல் எறியத் தொடங்கினார்கள். ஊர்வலத்தில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். துப்பாக்கி தோட்டாக்களும் திடீரென சுடத் தொடங்கின. அப்போது என் கையில் அடிபட்டது,'' என்றார்.

சப்-இன்ஸ்பெக்டர், தாக்குதல் நடத்தியவர் யார் என்று பார்க்க முடியவில்லை என்றார். சண்டையைத் தூண்டியது யார், யார் அதைத் தொடங்கினர் என்பதையும் அவர் கவனிக்கவில்லை.

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, பேரணி மசூதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, ​​பேரணியில் பங்கேற்றவர்களுடன் அன்சார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் விரைவில் தீவிரமடைந்தது மற்றும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசத் தொடங்கினர் என்று முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.

கடந்த வாரம், குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில், இந்துக்களின் நிகழ்வான ராம நவமியின் போது இதுபோன்ற மோதல்கள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.