5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையின்போது ஆன்லைனில் ஊடுருவிய சில விஷமிகள் பாட்டுப்பாடியும், இமோஜிக்களை அனுப்பியும் நீதிபதிகளை அதிருப்தியடையச் செய்தனர்.வடிவேலு நகைச்சுவையில் கடுப்பேத்துறார் மைலார்ட் என்றொரு வசனம் வரும். ஆனால், நெட்டிசன்கள் இங்கு மைலார்டையே கடுப்பேத்தியிருக்கின்றனர்.
அதன் பின்னர் விசாரணையைத் தொடர்ந்த நீதிபதி, 5ஜி விஷயத்தில் முதலில் அரசின் விளக்கம், நிலைப்பாடு என்னவென்று அறியாமலேயே ஜூஹி எதற்காக நேரடியாக நீதிமன்றத்தை அணுகினார் என்று கடிந்து கொண்டார். இவ்வாறாக வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இது முழுக்கமுழுக்க ஊடக கவனத்தைப்பெற செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வழக்கின் விசாரணையை தொழில்நுட்ப இடையூறு காரணமாக ஒத்திவைத்தார்.அதேவேளையில், நீதிமன்ற விசாரணையில் குறுக்கிட்ட நெட்டிசன்களின் ஐபி அட்ரெஸ் கொண்டு அவர்களின் வீட்டு அட்ரஸைக் கண்டுபிடித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
5ஜியும் கொரோனா சர்ச்சையும்..நம் நாட்டில் 2ஜியில் தொடங்கிய சர்ச்சை 5ஜி வரையிலும் ஏதோ ஒரு வகையில் நீடிக்கிறது. அண்மையில், 5ஜி இணையத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது என ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்தனர். இதனை அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அரசு மறுத்தது. இதுதொடர்பாக தொலைத்தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் நீண்ட விளக்கம் கூட வெளியிட்டது.இந்தியாவில் இன்னும் 5ஜி பணிகள் ஆரம்பிக்கவே இல்லை. இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு பூமியில் அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.