பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாதிரி வாடகை ஒப்பந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாதிரி சட்டத்தின் வரைவு கடந்த 2019ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வரைவு சட்டம் தொடர்பாக மக்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. இந்நிலையில் இந்த வரைவு சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


அத்துடன் இந்த மாதிரி வாடகை சட்டத்தை ஏற்கும் வகையில் மாநிலங்கள் புதிய சட்டங்களை இயற்றியும், ஏற்கெனவே இருக்கும் சட்டங்களில் மாற்றம் செய்தும் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய மாதிரி வாடகை சட்டத்தின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் எளிதாக வீடு வாடகைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் வீடு வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் வாடகைக்கு செல்பவர்கள் இடையே இருக்கும் பிரச்னையையும் எளிதாக தீர்க்கம் முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 




இந்தச் சூழலில் மாதிரி வாடகை ஒப்பந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?



  • இந்தப் புதிய வாடகை ஒப்பந்த சட்டத்தின் மூலம் அனைத்து வகையான மக்களுக்கும்  வாடகைக்கு வீடு கிடைக்கும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வீட்டு வாடகை விடும் தொழிலையும் முறைபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

  • மேலும் வீடு மற்றும் விற்பனை இடங்கள் வாடகை விடுவது தொடர்பாக ஒரு அமைப்பை மாநிலங்கள் உருவாக்க வேண்டும். இந்த அமைப்பின் மூலம் உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு இருப்பவர்கள் இடையே உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டும். 

  • மேலும் வீடு வாடகைக்கு விடும் போது 2 மாத வாடகையை மட்டுமே இனிமேல் முன் தொகையாக வாங்கவேண்டும். அதேபோல் விற்பனை இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் ஆறு மாத வாடகை வரை மட்டுமே முன் தொகையாக பெற முடியும். 

  • வாடகை ஒப்பந்தத்தின்படி கூறப்பட்ட கால அவகாசம் முடிந்தப்பின் வாடகைக்கு இருக்கும் நபர் காலி செய்ய மறுத்தால் அவர்களிடம் இருந்து உரிமையாளர்  முதல் இரண்டு மாதங்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக வாடகை வசூலிக்கலாம். அதன்பின்னரும் காலி செய்யவில்லை என்றால் நான்கு மடங்கு அதிகமாக வாடகை வசூலிக்கலாம். 

  • இந்தச் சட்டத்தில் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு இருக்கும் நபர்களின் உரிமைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


நிலம் என்பது மாநிலப் பட்டியலில் வருகிறது. எனவே வாடகை ஒப்பந்தம் தொடர்பான சட்டங்களை மாநில அரசுகள் சட்டமன்றம் மூலம் இயற்ற வேண்டும். எனவே மத்திய அரசின் இந்த மாதிரி வாடகை ஒப்பந்த சட்டத்தை மாநில அரசுகள் தங்களின் சட்டம் மூலம் ஏற்றுக் கொள்ளலாம். இந்திய அரசிலயமைப்புச் சட்டத்தின்படி அட்டவணை எண் 7ல் மூன்று பட்டியல்கள் அமைந்துள்ளன. அதன்படி மத்திய பட்டியல் என்பதில் உள்ள விஷயங்களில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். அதேபோல மாநில பட்டியலில் உள்ள விஷயங்களுக்கு மாநில சட்டமன்றங்கள் சட்டம் இயற்ற முடியும். மேலும் மூன்றாவதாக உள்ள பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் சட்டம் இயற்ற முடியும்.


பொதுப்பட்டியலில் உள்ள ஒரே விஷயத்தின் மீது மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றினால், நாடாளுமன்றத்தின் சட்டம் தான் செல்லும். ஆனால் ஒரு வேளை அந்த மாநில சட்டம் குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல் பெற்றால், அப்போது அந்த மாநிலத்தில் மட்டும் அந்தச் சட்டம் செல்லும். எனினும் மீண்டும் அதே விஷயத்தின் மீது மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் அப்போது அந்த மாநில சட்டம் செல்லாமல் போய்விடும். பொதுப்பட்டியல் மீது மத்திய அரசுக்கு பெரியளவில் அதிகாரம் உள்ளது. 


மேலும் படிக்க: ’18-44 வயதுக்கு பணம் கொடுத்து தடுப்பூசி என்பது, அடிப்படையிலேயே அபத்தமானது’ - உச்சநீதிமன்றம்