போதை மருந்து சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
சமீப காலமாகவே போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் விசாரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்ற 2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பிறகு அவரது காதலி ரியா சக்ரவர்த்தி போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல ப்ரீத்திகா சவுஹான், ஷபானா சயீத், அர்மான் கோலி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் போன்றோர்களும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் போதை மருந்து ( Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருந்தவர்களை குற்றவாளிகளாக் கருதக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள போதை மருந்து சட்டம் (NDPS ACT) கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அமலுக்கு வந்தது. 1989, 2001, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, போதைப் பொருளை வைத்திருப்பது, விற்பனை செய்வது, இறக்குமதி செய்வது போன்றவை குற்றமாகும். போதைப் பொருளை பயன்படுத்துபவர்களுக்கு அவர்களிடம் இருந்து பிடிப்படும் போதைப்பொருட்களின் அளவை பொருத்து தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மிகச்சிறிய அளவில் போதைப்பொருட்கள் வைத்திருப்பதையும் அவற்றை பயன்படுத்துவதையும் குற்றமாக கருதக்கூடாது என நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது.
இதையடுத்து போதை மருந்து சட்டத்தில் திருத்தம் ஏதாவது செய்ய வேண்டுமா என்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உட்பட என்சிபி மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) ஆகிய துறைகளிடம் வருவாய் துறை கடந்த மாதம் பரிந்துரை கேட்டிருந்தது. திருத்தம் செய்யப்பட வேண்டுமெனில் அதற்கான காரணத்தையும் குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போதை மருந்து சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருந்தவர்களை குற்றவாளிகளாக் கருதக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையும், அவற்றை சார்ந்திருப்பவர்களையும் பாதிக்கப்பட்டவர்களாக நடத்தி போதைப் பொருள் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் என சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருந்து பிடிபட்டவர்களை சிறையில் அடைக்காமல், மறு வாழ்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.