மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாக குற்றம்சாட்டிய மூன்று காங்கிரஸ் தலைவர்கள், அதுதொடர்பான ட்வீட், வீடியோ மற்றும் ரீட்வீட்களை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. 


ஸ்மிருதி இரானி தாக்கல் செய்த 2 கோடி ரூபாய் அவதூறு வழக்கில் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா மற்றும் நெட்டா டிசோசா ஆகியோர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ட்வீட்களை நீக்கத் தவறினால், ட்விட்டர் அதை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்ணா, "குறிப்பிட்ட ட்வீட்களால் வாதியின் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டது. உண்மைகளை சரிபார்க்காமல் வாதிக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


தனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "ஸ்மிருதி இரானி தொடர்ந்த வழக்கில் முறைப்படி பதில் அளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உண்மைகளை நீதிமன்றத்தின் முன் முன்வைக்க காத்திருக்கிறோம். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். ஸ்மிருதி இரானியின் பொய்களை நிரூபிப்போம்" ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இந்த விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "உயர் பதவியில் இருப்பவர்கள் அல்லது எந்தவொரு குடிமகன் மீதும் அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன், அனைத்து உண்மைகளையும் சரிபார்க்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


ஸ்மிருதி இரானியின் 18 வயது மகள் கோவாவில் சட்டவிரோத பார் நடத்தி வருகிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. கடந்த வாரம், 3 காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களது கட்சியினருக்கு ஸ்மிருதி இரானி நோட்டீஸ் அனுப்பினார். எழுத்துப்பூர்வமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலுயுறுத்தியிருந்தார்.


தனது மகள் பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பட்டதாக குற்றம் சாட்டிய இரானி, தவறும் செய்ததற்கான ஆதாரத்தை காட்டுமாறு எதிர்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார். தனது மகள் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி என்றும் மதுக்கடை எதுவும் நடத்தவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 


செய்தியாளர் சந்திப்பின் போது, ​​அமைச்சரின் மகள் நடத்தும் உணவகத்திற்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் என்று கூறி அந்த நகலை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. பாரின் உரிமம் இறந்து ஓராண்டு ஆன ஒருவரின் பெயரில் எடுக்கப்பட்டதாகவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டியிருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண