ஸ்மிருதி இரானி.. நாம் இன்று இவரை அமைச்சராகப் பார்க்கிறோம். ஆனால் வாழ்க்கையில் முன்னேறி வருவதற்கு முன் இவருக்குப் பல முகங்கள் இருந்துள்ளன.


ஸ்மிருதி இரானி, 1976 ஆம் ஆண்டு டெல்லியில் பஞ்சாபி–வங்காள குடும்பத்தில் மூன்று மகள்களில் மூத்தவராகப் பிறந்தார். இவரது குடும்பம் ஆர்எஸ்எஸ் சார்பு கொள்கை கொண்ட குடும்பம். இவரது தாத்தா ஆர்எஸ்எஸ்ஸின் தீவிர உறுப்பினர். இவரது தாய் ஜன சங்கத்தில் இருந்தார். இதனால் இவர் சிறு வயதிலிருந்தே ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் பற்றுடன் இருந்தார். 


தொழில் ரீதியாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்க ஸ்மிருதி ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆரம்பநாட்களில் மெக் டோனால்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். பின்னர் மாடலிங்கில் அடியெடுத்து வைத்து மிஸ் இந்தியா போட்டியில் 5 ஃபைனலிஸ்ட்களில் ஒருவராக வந்தார். அதன் பின்னர் சின்னத்திரையோரம் கவனம் செலுத்தினார். நிறைய தொடர்களில் நடித்தபோது, கியூன் கி சாஸ் பி கபி பஹு தி என்ற தொடர் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதில் அவர் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் பல சீரியல்களிலும் அவர் நடித்தார். ஒரு டிராமா ஹீரோயினாகவே மாறினார். 2001ல் ஜூபின் இரானி என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார்.


2002ல் ஜீ டிவி தயாரித்த ராமாயண தொடரில் சீதையாக நடித்தார். 2006ல் அவர் தோடி சி ஜமீன் தோடா சா ஆஸ்மான் என்ற தொடரை தயாரித்தார். பின்னர் நிறைய தயாரிப்புகள் என்று வளர்ந்தார். 2003 லேயே அவர் பாஜகவில் இணைந்துவிட்டார். 2004ல் அவர் மகாராஷ்டிரா இளைஞரணித் தலைவரானார். 2011ல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரானார். 2019ல் மக்களவைத் தேர்தலில் உ.பி. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தப் போட்டியில் அவர் வெற்றி பெற்றார். 2014 முதல் 2016 வரை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மனி மொழிக்குப் பதில் சமஸ்கிருத மொழியை விருப்பப்பாடமாக கொண்டு வந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.


இவரது கல்வித் தகுதி சர்ச்சையானது. இவர் பட்டம் பெற்றாரா இல்லையா என்று பெரிய விவாதமே நடந்தது. அவர் தான் பிஏ, பிகாம் என இரண்டு பட்டங்களைப் பெற்றதாகக் கூறியிருந்தது சர்ச்சையானது. டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்த 4 ஆண்டு பாடமுறையை ரத்து செய்து சர்ச்சையைக் கிளப்பினார். ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தில் அவருக்கு அழுத்தங்கள் தந்ததாக பல சர்ச்சைகளுக்கு ஆளானார்.


41 வயதில் அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரானார். அப்போது அவர் போலி செய்தியை வெளியிட்டதாகத் தெரிந்தால் அந்த பத்திரிகையாளர் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால் அது வெளியான 15 மணி நேரத்தில் பிரதமர் மோடி அதனைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.


சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்ட போது அவர் அதை எதிர்த்தார். ஒரு பிரஸ் மீட்டில் அவர், நீங்கள் உங்கள் நண்பரின் வீட்டுக்குள் செல்லும்போது ரத்தம் நிறைந்த சானிட்டரி நாப்கினை கையில் எடுத்துச் செல்வீர்களா எனக் கேட்டு மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கினார்.


அரசியல் ரீதியாக பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளான ஸ்மிரிதி இரானி, இப்பொறுப்பு வருவதற்கு கடந்த வந்த பாதை ஒன்றை மட்டும் உணர்த்துகிறது. எந்த நிலையிலும், பெண்களுக்கு அரியாசனம் கிடைப்பது எளிதானதல்ல