உத்தரபிரதேசத்தில் 7  கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல் மற்றும் இராண்டாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 15 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் 3 ஆம் கட்டத்தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. இந்த நிலையில் நடிகை கங்கனா  யோகி அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


யோகி அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும்


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ”வணக்கம் நண்பர்களே, நாம் எல்லோருக்கும் தெரியும் உத்திர பிரதேசத்தில் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த தேர்தல் குருட்சேத்திரத்தில் நம்மிடமிருக்கும் ஒரே ஆயுதம் வாக்கு. நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் நமக்கு பிரியமான யோகி  அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.


ஆகையால், தாராளமாக வாக்களிக்க வேண்டும். எப்போது வாக்களிக்க சென்றாலும் மூன்று, நான்கு பேரை கட்டாயம் அழைத்து செல்லுங்கள். நினைவில் இருக்கட்டும்,வெற்றி சாதனை தொடரட்டும் ஒரு வாக்கும் தவறாதிருக்கட்டும் ஜெய் ஸ்ரீ ராம்” என்று பேசியிருக்கிறார். 


 






 


சர்ச்சைகளுக்கு பேர் போன கங்கனா 


இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை கங்கனா ரனாவத் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து நடித்திருமையால் பெரும் வரவேற்பைப் பெற்றார். எப்போதுமே தனது மனதில் தோன்றுவதை சொல்லும் இயல்பு கொண்டதால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.


அந்த வகையில், பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி எனவும் இந்தியாவுக்கு 2014 ல் தான் உண்மையான சுதந்திரம் எனவும் 1947 ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சைதான் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


அதே போல, பஞ்சாப்பில் பயணத்தின் போது விவசாயிகளின் போராட்டத்தால் மோடி நிறுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், “பஞ்சாப்பில் நடந்தது அவமானகரமானது. பிரதமர் என்பவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். அவர்160 கோடி மக்களின் குரல். அவர் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியரின் மீதான தாக்குதல், பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால் தேசம் ஒரு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்தக்கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 


இதனைத் தொடர்ந்து, புஷ்பா மற்றும் கேஜிஎப்  பட போஸ்டர்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த அவர், தென்னிந்திய கலைஞர்கள் அவர்களின் கலாச்சாரத்தில் வேரூன்றியவர்களாக இருக்கின்றனர். அவர்களது தொழிலும், ஆர்வமும் இணையற்றதாக இருக்கிறது. பாலிவுட் அவர்களை சிதைக்க அனுமதிக்க கூடாது.” என்று கூறியிருந்தார்.