டெல்லியிலிருந்து ஜபல்பூருக்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் க்யூ400 விமானத்தின் விமானி, கேபினில் புகை வெளியானதை கண்டு அவசர அழைப்பு மேற்கொண்டு, விமானத்தை டெல்லியில் தரையிறக்கினார்.
விமானம் 5,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது, விமான குழுவினர் புகை வெளியாவதை கண்டனர். பின்னர், அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டகாகக் கூறப்படுகிறது.
கேபினில் லேசான புகை வெளியாவதாக கண்ட விமான குழுவினர் விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சோதனையில், கழிவறையில் புகை அல்லது சேதம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
விமானம் 14,000 அடி உயரத்தை எட்டியதும் புகை அதிகமாகத் தொடங்கியது. இதையடுத்து விமானி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் டெல்லி நோக்கி திரும்பியது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் இடது எஞ்சினில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் புகை கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இது தொழில்நுட்பக் கோளாறு என்றும், பீதி அடைய வேண்டாம் என்றும் கூறியுள்ளதாக விமான போக்குவரத்து வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
"டெல்லியில் இருந்து ஜபல்பூருக்குச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக திரும்பியது. 5000 அடியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கேபினில் புகை வெளியானதை ஊழியர்கள் கண்டனர். பயணிகள் பத்திரமாக இறங்கினர்" என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்வீட் செய்த வீடியோவில் புகை நிரம்பிய கேபினை பார்க்கலாம். விமானம் டெல்லி திரும்பிய பிறகு பயணிகள் வெளியேறும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 15 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவது இரண்டாவது முறையாக நிகழ்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்