கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஆதிசக்தி நகர் பகுதியில் ஒரு பழைய வீடு உள்ளது. அந்த வீடு பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. அந்த மூடிய வீட்டில் 5 பேரின் எலும்புக்கூடுகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெஞ்சை பதற வைக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த வீட்டில் ஓய்வு பெற்ற செயல் பொறியாளர் ஜெகநாத் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அந்த குடும்பத்தை கடைசியாக பார்த்ததாகவும் அக்கம் பக்கத்தினரால் கூறப்படுகிறது. ஜெகநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மக்களிடம் அதிகம் பேசாததால் யாரும் அவர்களை பற்றி கண்டு கொள்ளவில்லை என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு யாரோ அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்த தடயங்கள் இருந்ததகவும்,  ஆனால் யாரும் இதுபற்றி காவல்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடுகள், ஜெகநாத் ரெட்டி, (85 வயது), ஜெகநாத்தின் மனைவி பிரேமா (80 வயது), ஜெகநாத்தின் மகள் திரிவேணி (62 வயது), ஜெகநாதரின் மகன் கிருஷ்ணா (60 வயது), ஜெகநாத்தின் மகன் நரேந்திரன் (57 வயது) என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதி முழுவதும் திகைத்து நிற்க, போலீசார் அனைத்து எலும்புக்கூடுகளையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், அதன் பின்னரே இந்த ஐந்து பேரும் எப்படி, எப்போது இறந்தனர் என்பது தெரியவரும். மேலும் தடயவியல் நிபுணர்களும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தையடுத்து, அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர், மாநில உள்துறை அமைச்சரும் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக வழக்கை முழு வீச்சில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், ” நான் எஸ்பி, ஐஜி மற்றும் பிற மூத்த அதிகாரிகளிடம் பேசினேன், மூடப்பட்ட வீட்டில் இருந்து 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்போது இறந்தார்கள், இந்த உடல்கள் யாருடையது, ஓய்வு பெற்ற பொறியாளரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் துறையினர், தடவியல் அதிகாரிகள் இது யாருடைய வீடு, இங்கு யார் வசித்து வருகிறார்கள், கொலை செய்யப்பட்டனரா, என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது இந்த சூழலில் எதையும் கூற முடியாது. தடயவியல் அறிக்கை வந்த பின்னரே எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும்” என கூறியுள்ளார்.