CISF Chief: மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்கும், இந்தோ-திபெத் எல்லை காவல்படைக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு:


மணிப்பூர் கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் மத்திய துணை ராணுவப் படைகளின் தலைமை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,  இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையின் தலைவராக சிறந்த உளவுத்துறை அதிகாரியாக அறியப்படும் ராகுல் ரஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அனிஷ் தயாள் சிங் சிஆர்பிஎஃப் பிரிவின் புதிய தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மத்திய தொழில்துறை பாதுகாப்புத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நினா சிங், அப்பதவியை பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.  


யார் இந்த நினா சிங்?


நினா சிங் மணிப்பூர் கேடர் அதிகாரியாக இந்திய போலீஸ் சேவையை (ஐபிஎஸ்) தொடர்ந்தாலும்,  பின்னர் ராஜஸ்தான் கேடருக்கு மாறினார். 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி ஷீல் வர்தன் சிங் ஓய்வு பெற்றதை தொடர்ந்து சிஐஎஸ்எஃப் டிஜியாகவும் கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். தற்போது அவர் CISF இன் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக உள்ளார். இந்த பிரிவானது நாடு முழுவதும் விமான நிலையங்கள், டெல்லி மெட்ரோ, அரசு கட்டிடங்கள் மற்றும் திட்ட நிறுவல்கள் தொடர்பான பாதுகாப்பு பணிகளை நிர்வகிக்கிறது. ஜூலை 31, 2024 வரை சிஐஎஸ்எஃப் டிஜியாக நினா சிங்கை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


CRPF-க்கு புதிய இயக்குனர்:


1988 பேட்சை சேர்ந்த மணிப்பூர் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அனிஷ் தயாள் சிங், உலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக இந்தோ-திபெத் எல்லைக் காவல் துறையின் (ஐடிபிபி) தலைமைப் பொறுப்பை இவர் கூடுதலாக வகித்து வருகிறார். டிசம்பர் 31, 2024 அன்று ஓய்வு பெறும் வரை அவர் சிஆர்பிஎஃப் தலைவராக இருப்பார். சுமார் 3.25 லட்சம் வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎஃப், அமைதியைப் பேணுவதற்காக நாடு முழுவதும் செயல்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை முறியடிப்பதில் தீவிர பங்காற்றுகிறது.


ITBP-க்கு புதிய தலைவர்


மணிப்பூர் கேடரின் 1989-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ரஸ்கோத்ரா, உளவுத்துறை பணியகத்தில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக முக்கியமான பதவிகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில்,  90,000 பணியாளர்களைக் கொண்ட ITBP இன் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சீன-இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ITBP க்கு ரஸ்கோத்ராவின் நியமனம், துணை ராணுவப் படையில் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை சேகரிப்புக்காக உளவுத்துறை அதிகாரிகளின் கூடுதல் குழு இருக்கும் நேரத்தில் நடைபெற்றுள்ளது. ரஸ்கோத்ரா உளவுத்துறை பணியகத்தில் (IB) சிறப்பு இயக்குநராக இருந்தார். அவர் செப்டம்பர் 30, 2025 வரை பதவியில் தொடருவார் அதாவது அவர் ஓய்வுபெறும் தேதி வரை என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


1989-ம் ஆண்டு குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான விவேக் ஸ்ரீவஸ்தவா, தீயணைப்பு சேவை, குடிமைத் தற்காப்பு மற்றும் ஊர்க்காவல் படையின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 30, 2025 வரை, அதாவது ஓய்வு பெறும் தேதி வரை அவர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவஸ்தவா தற்போது ஐபியில் சிறப்பு இயக்குநராக உள்ளார்.