ஹைதராபாத்தில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அடர்ந்த புகையை சுவாசித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.






ஸ்வப்னலோக் வளாகத்தின் 5வது மாடியில் இரவு 7.30 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 13 பேர் உள்ளே சிக்கினர், அதில் 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் கடுமையான புகை காரணமாக 6 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


"நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தின் போது அவர்கள் 6 பேரும் உள்ளே சிக்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 7 பேர் அங்கிருந்து பத்திரமாக மீட்க்கப்பட்டனர்" என வடக்கு மண்டல டிசிபி சந்தன தீப்தி கூறினார்.


இதற்கிடையே தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. டிஆர்எஃப் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி இரங்கலை தெரிவித்துள்ளார்.






மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி ட்விட்டரில், "செகந்திராபாத்தில் உள்ள ஸ்வப்னாலோக் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” என குறிப்பிட்டிருந்தார்.