பெங்களூருவில் ரயில் நிலையம் அருகே ஒரு ப்ளாஸ்டிக் ட்ரம்மில் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இது சீரியல் கொலைகாரனின் கைவரிசையாக இருக்கலாம் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. பெங்களூருவில் பையப்பனஹல்லி ரயில் நிலையத்தின் வாயிலில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஒரு ப்ளாஸ்டிக் டிரம் குறித்து சந்தேகம் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் அந்த டிரம்மை சோதனை செய்தனர். அதன் மேல்பரப்பில் பழையதுணிகள் இருந்த நிலையில் அதற்குக் கீழே ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.


அப்போது அந்தப் பெண் தமன்னா. வயது 27 என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்ததும் அவரது மைத்துனரே என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தமன்னா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் அவருடைய கணவர் அஃப்ரோஸுடன் அராரியா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கணவர் வழி உறவினரான இன்டேகாப் என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பீகாரிலிருந்து புறப்பட்டு பெங்களூரு வந்தனர். இதனால் அஃப்ரோஸ் குடும்பத்தினர் பெருத்த அவமானம் ஏற்பட்டதாக கருதியுள்ளனர். குறிப்பாக அஃப்ரோஸின் சகோதரர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அண்ணன் மனைவி தமன்னாவை தேடி வந்துள்ளார்.


இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு தமன்னாவும் இன்டேகாபும் பெங்களூருவில் வசிப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அஃப்ரோஸின் சகோதரர் பெங்களூருவுக்குச் சென்றார். பிப்ரவரி 12 ஆம் தேதியன்று தமன்னாவை அஃப்ரோஸின் சகோதரரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கொலை செய்துவிட்டு உடலை ப்ளாஸ்டிக் டிரம்மில் வைத்து ரயில் நிலையத்தின் அருகே வைத்துவிட்டுச் சென்றனர். ஒரு ஆட்டோரிக்‌ஷாவில் டிரம்மைக் கொண்டுவந்து ரயில் நிலையத்தில் வைத்துச் சென்றுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளை கண்டுபிடித்துள்ளோம். ஆகையால் அரசியல் கட்சியினர் கூறுவது போல் இது சீரியல் கில்லர் வேலை இல்லை என்று தெரிவித்துள்ளது.


முன்னதாக கடந்த டிசம்பர் 6ஆம் தேதியறு ஒரு ரயிலில் டிரம்முக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்படது. அதேபோல் ஜனவரி 4ஆம் தேதி பெங்களூருவின் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் ஒரு ப்ளாட்ஃபாரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த டிரம்முக்குள் பல காயங்களுடன் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலே கூறிய இரண்டு சம்பவங்களிலும் கொலையான பெண்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் மூன்றாவதாக ஒரு டிரம்மில் சடலம் கண்டெடுக்கப்படவே இது சீரியல் கொலைகாரனின் கைவரிசை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால் போலீஸார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.


இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா தனது ட்விட்டர் பக்கத்தில், பெங்களூரு மக்களே இதற்கு முன்னர் ரயில் நிலையங்களில் கண்டெடுக்கப்பட்ட டிரம்களும், அதில் இருந்த சடலங்கள் பற்றிய செய்திகளும் நினைவில் இருக்கிறதா? சீரியல் கில்லர் அச்சுறுத்தல் உள்ளது என்று பதிவிட்டிருந்தார். கர்நாடகா இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் இந்தச் சர்ச்சை அங்கு உள்ளூர் அரசியலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெங்களூரு போலீஸாரும் பரபரப்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.