முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்ட சீதாபூர் சாமியாருக்கு ஞாயிற்றுக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. அவரது கருத்துக்காக, அவர் தன் மீது எந்த வகையான தாக்குதலுக்கும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இப்படிக் கூறியதற்கு ஏதேனும் வருத்தப்படுகிறாரா என்று அவரிடம் கேட்டபோது, "எனக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. நான் சொன்னது என் மதத்திற்காகவும், நம் பெண்களுக்காகவும். என் மதத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்" என்றார்.
சீதாபூரில் உள்ள கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசீன் ஆசிரமத்தின் மஹந்த் பஜ்ரங் முனி தாஸ், ஏப்ரல் 2 அன்று முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வுடன் பேசியதாகக் கூறப்படுகிறது. அதன் வீடியோ பின்னர் சமூக ஊடக தளங்களில் வெளிவந்தது.
ஒரு மசூதிக்கு வெளியே அவர் பேசிய இரண்டு நிமிட வீடியோவில், அவர் ஒரு சமூகத்தைக் குறிக்க "ஜிஹாதி" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும், அந்த சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவரால் எந்த இந்துப் பெண்ணை துன்புறுத்தினாலும், பதிலுக்கு அவர் அவர்களது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று மிரட்டுவதையும் கவனிக்க முடிந்தது.
அவர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மாலை அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது.
இதையடுத்து ஏப்ரல் 13ஆம் தேதி உத்தரபிரதேச காவல்துறையினரால் சீதாபூரில் கைது செய்யப்பட்டார்.
சாமியார் கைது செய்யப்படுவதில் நிலவிய தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய சமாஜ்வாதி கட்சி, ஆளும் பாஜகவை "சகோதரத்துவத்தின் மிகப்பெரிய எதிரி" என்று கூறியது.
"காவல்துறையினர் ஏன் இன்னும் வெறுங்கையுடன் இருக்கிறார்கள்? அரசு பதில் சொல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது? முதல்வர்தான் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்," என்று அந்தக் கட்சி ஒரு ட்வீட்டில் கேள்வி எழுப்பியிருந்தது.
நாற்பது வருட காத்திருப்புக்குப் பிறகு, கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) இருந்து இடம்பெயர்ந்த 63 இந்துக் குடும்பங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு செவ்வாயன்று வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளை வழங்கியது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் விவசாய தேவைகளுக்காக இரண்டு ஏக்கர் நிலமும், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் ஒரு வீடும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "இந்த குடும்பங்களின் இத்தகைய அவலங்களுக்கு முன்னாள் ஆட்சி செய்த அரசுகளே பொறுப்பு. இந்தக் குடும்பங்கள் அனைத்தும் 1970களில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்து புலம்பெயர்ந்தவர்கள். அதாவது தற்போது பங்களாதேஷ் என்று பெயர் கொண்டுள்ள நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் நகரத்தில் உள்ள நூல் ஆலையில் வேலை செய்தனர்" என்றார். 1984 ஆம் ஆண்டு நூல் ஆலை மூடப்பட்டதாகவும், அவர்களில் சிலருக்கு மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும், 65 குடும்பங்கள் தங்கள் மறுவாழ்வுக்காகக் காத்திருந்ததாகவும் யோகி கூறினார். "உங்களது 38 ஆண்டுகால காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துவிட்டது” என்று துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் முன்னிலையில் யோகி ஆதித்யநாத் கூறினார்.