புதுச்சேரிக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று அமித்ஷாவிடம்  முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார். புதுவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  டெல்லி புறப்பட்டார். விமான நிலையத்தில் அவரிடம், முதலமைச்சர் ரங்கசாமி ஒரு கடிதம் வழங்கினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. மாநில அந்தஸ்து இல்லாததால் எந்தவித அதிகாரமுமின்றி புதிதாக வேலைவாய்ப்பு, புதிய தொழிற்சாலைகள், சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்க முடியவில்லை. இந்த நிதியாண்டில் புதுவை மாநிலத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதியுதவி வழங்கவேண்டும். கடந்த நிதியாண்டில் ரூ.1,874 கோடி மத்திய நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் ரூ.1,724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.150 கோடி குறைவாகும்.




மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு மற்ற யூனியன் பிரதேசங்களைப்போல் புதுச்சேரிக்கும் 100 சதவீத நிதியுதவி வழங்கவேண்டும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு 395 ஏக்கர் நிலம் தமிழக பகுதியிலும், 30 ஏக்கர் நிலம் புதுச்சேரி பகுதியிலும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு தேவையான நிதி ரூ.425 கோடியை வழங்கவேண்டும். புதுவை சட்டமன்றம் முற்றிலும் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ரூ.300 கோடியில் புதிதாக சட்டமன்ற கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளோம். அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுகாதாரத்துறையில் ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்த ரூ.500 கோடி சிறப்பு நிதி வழங்கவேண்டும்.


புதுவையில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்துள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஸ்பின்னிங் மில் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த ரூ.500 கோடி சிறப்பு நிதி வழங்கவேண்டும். புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நிலுவைத்தொகைகளை வழங்க ரூ.186.50 கோடியை வழங்கவேண்டும். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்ததால் நகரம் மற்றும் கிராமப்புற சாலைகள் மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றன. அவற்றை சரிசெய்ய மாநில அரசிடம் போதிய நிதி இல்லை. எனவே மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.150 கோடி வழங்கவேண்டும். ஒட்டுமொத்தமாக ரூ.2 ஆயிரம் கோடியாவது கூடுதல் நிதியாக பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன் வழங்கவேண்டும் என கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண