இந்தியாவில் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்பாட்டுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இந்த தடை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மிகவும் குறைவாக (பெரும்பாலும் ஒரு முறை) பயன்படுத்தப்பட்டாலும் நாடு முழுவதும் அதிக குப்பையை ஏற்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது. இவற்றைத் தடுக்க ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே நுழைவதைத் தடுக்க, எல்லைகளில் சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சோதனை மையங்கள் மூலம் முறைகேடாக ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, பயன்படுத்துவது ஆகியவற்றைத் தவிர்க்க சிறப்பு அமலாக்கக் குழுக்கள் உருவாக்கப்படும். அதேபோல் பிளாஸ்டிக் தடை குறித்து அனைத்து பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், மின்னணு வணிக நிறுவனங்கள், கடைக்காரர்கள், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகம், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 50 மைக்ரானில் இருந்து 75 மைக்ரானாக அதிகரிக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 120 மைக்ரானாக அதிகரிக்கப்பட உள்ளது.இந்தத் தடையை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி, அபராதம், பொருட்கள் பறிமுதல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தையே மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதலே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் பொருட்கள், தடை, அவற்றுக்கான மாற்று குறித்து விரிவாக அறிய: https://tnpcb.gov.in/PPFTN/tamil/faq.php
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்