மத்திய அரசு நாடு முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சட்டத்தை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது. இதனால் அதிர்ச்சியும்,  ஆத்திரமும் அடைந்த விவசாயிகள் டெல்லியில் அற வழியில் தொடர்ந்து போராடிவந்தனர். சூழல் இப்படி இருக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.


அப்போது பேசிய அவர், “விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருள்களைச் சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.




மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். ஒரு வருடத்துக்கு மேலாகப் போராடிவரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என கூறினார்.


பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து நன்றியும், பாராட்டும் குவிந்தன. ஆனால் கங்கனா ரணாவத்தோ, “இது வெட்கக்கேடான செயல்” என கூறியிருந்தார்.


இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “`காலிஸ்தான் தீவிரவாதிகள் இன்று வேண்டுமானால் அரசை வளைத்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணை மறக்கக்கூடாது. நாட்டில் பெண் பிரதமர் மட்டுமே காலிஸ்தான் தீவிரவாதிகளை தன் கால் ஷுவால் நசுக்கினார். 




இந்த நாட்டுக்கு அவர் எவ்வளவுதான் கெடுதல் விளைவித்திருந்தாலும், தன் உயிரைப் பணையம் வைத்து கொசுக்களை நசுக்குவது போல் காலிஸ்தான் தீவிரவாதிகளைக் காலால் நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக்கேட்டாலே நடுங்குகிறார்கள். அவரைப்போன்ற ஒருவர் அவர்களுக்குத் தேவை” என பதிவிட்டிருக்கிறார்.


போராட்டக்காரர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் தனது கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும் கண்டனங்கள் வலுத்துவருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண