ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் காவல்துறை மற்றும் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் பள்ளி மாணவர்கள் 60 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஜம்மூ காஷ்மீர் மாவட்டம் குல்காம் மாவட்டத்தில் இன்று காலை தெற்கு காஷ்மீர் பகுதியின் அஷ்மூஜி ஏரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அடையாளம் தெரியாத பயங்கரவாத நபர் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகத்  தகவல் கிடைத்துள்ளது. மேலும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் தாக்குதல் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





இறந்தவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகாமையில் இருந்த பள்ளியிலிருந்து 60 மாணவர்களை போலீசாரும் ராணுவத்தினரும் கட்டாயமாக அப்புறப்படுத்தியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அண்மையில்தான், ஜம்மு-காஷ்மீரின் ஷோபியானில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. கொல்லப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பூஞ்ச் பகுதியில் நேற்று 5 வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த என் கவுன்ட்டர் சம்பவம் நடந்தேறியது. ‘லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேடுதல் வேட்டை நடைபெறுகிறது’ என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.