பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராப் சிங்கர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டதன் மூலம், அவர்கள் எப்படி கொலை செய்தனர், சதித்திட்டம் எப்படி தீட்டப்பட்டது பற்றிய முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், நடிகர் சல்மான் கானைக் கொல்ல திட்டமிட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பஞ்சாப் காவல்துறையின் குண்டர் தடுப்பு அதிரடிப் படை (AGTF) சனிக்கிழமையன்று, கொலையில் தொடர்புடைய கடைசி நபரையும் அதாவது துப்பாக்கியால் சுட்ட ஆறாவது நபரை கைது செய்தனர். அவரின் பெயர் தீபக் முடி என்பது தெரிய வந்துள்ளது. அவர், தனது இரண்டு உதவியாளர்களுடன் நேபாளத்திற்கு தப்பி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். மேற்குவங்கத்தில் இந்திய நேபாள எல்லையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டெல்லி காவல்துறை மற்றும் மத்திய அமைப்புகளுடன் குண்டர் தடுப்பு அதிரடிப் படை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. மேற்குவங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள கரிபாரி காவல் நிலையப் பகுதியில் உள்ள இந்திய-நேபாள சோதனைச் சாவடி அருகே தீபக் முண்டி மற்றும் அவரது இரு உதவியாளர்களான கபில் பண்டிட் மற்றும் ஜோக்கர் என்ற ராஜிந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) கவுரவ் யாதவ் தெரிவித்தார். இந்த மூன்று கைதுகளுடன், சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரசின் பாக்னா கிராமத்தில் நடந்த என்கவுன்டரின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய மன்பிரீத் சிங் என்ற மனு குசா மற்றும் ஜக்ரூப் சிங் என்ற ரூபா ஆகியோர் கொல்லப்பட்டனர்.
கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட மற்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பிரியவ்ரத் ஃபௌஜி, காஷிஷ் மற்றும் அங்கித் செர்சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூஸ்வாலாவைக் கொன்ற பிறகு, முண்டி மற்றும் கபில் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்ததாகவும், முக்கிய சதிகாரரான கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் இருக்கும் இடத்தை நோக்கி தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டதாகவும் யாதவ் கூறியுள்ளார். முண்டியும் கபிலும் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், உ.பி. மற்றும் மேற்கு வங்கத்தில் தங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முண்டி மற்றும் கபில், தப்புவதற்கு ஏதுவாக, அவர்களை நேபாளத்தில் உள்ள பாதுகாப்பான வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்கனவே நேபாளத்தில் தங்கியிருந்த ராஜிந்தர் மேற்கு வங்காளத்திற்கு வந்திருந்தார். போலி பாஸ்போர்ட் மூலம் முண்டியையும் கபிலையும் துபாயில் குடியேற வைப்பதாக பிரார் உறுதியளித்திருக்கிறார். இருவரும் நேபாளம் அல்லது தாய்லாந்தில் தங்கள் போலி பாஸ்போர்ட்டைப் பெற வேண்டும். அதன் பிறகு அவர்கள் துபாய்க்கு செல்ல திட்டமிடப்பட்டது. கபில் பண்டிட்டிம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 2021 இல் பரோலில் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவர் தலைமறைவாக இருந்தார். ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பெவாட்டைச் சேர்ந்த நபரைக் கொலை செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
"நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சம்பத் நெஹ்ரா மற்றும் கோல்டி பிரார் மூலம் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலை அவர் அணுகினார்" என்று டிஜிபி கூறியுள்ளா். பண்டிட், சச்சின் பிஷ்னோய் மற்றும் சந்தோஷ் யாதவ் ஆகியோருடன் இணைந்து சம்மான் கானைக் கொல்வதற்கான வியூகத்தைத் திட்டமிடுவதற்காக அவரை பின் தொடருமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.