விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், 150 நாட்களுக்கு 'இந்திய ஒற்றுமை' நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நடைபயணத்தின் போது, ​​காங்கிரஸ் தலைவர்கள், நாட்டின் பல பகுதிகளில் மக்களுடன் உரையாடி பேரணிகளை நடத்துவார்கள்.






தமிழ்நாட்டில் பெண்கள் சிலருடன் ராகுல் காந்தி உரையாடிய போது நடந்த வேடிக்கையான சம்பவத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார். ​​​​தமிழ்நாட்டை ராகுல் காந்தி விரும்புவதால், அவருக்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக அந்த பெண்கள் உரையாடலின் போது கூறியுள்ளனர்.


"நேற்று மதியம் மார்த்தாண்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பெண்களுடன் ராகுல் காந்தி உரையாடியபோது, தமிழ்நாட்டை ராகுல் காந்தி நேசிக்கிறார் என்றும் அவருக்குத் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் ஒரு பெண்மணி கூறினார்" என்று ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்தார்.


"ராகுல் காந்தி, மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். புகைப்படம் அதையேக் காட்டுகிறது" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொங்கி உள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட பேரணி, 150 நாள்களுக்கு நீள்கிறது. கிட்டத்தட்ட 3,500 கிமீக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.


3,500 கிலோமீட்டர் தூர யாத்திரை பேரணியுடன் தொடங்கப்பட்டுள்ளது. பாத யாத்திரை வியாழக்கிழமை காலை தொடங்கியது. ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை இரண்டு தொகுதிகளாக நடைபயணம் மேற்கொள்வார்கள். அடுத்த 150 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் இதில் உள்ளடக்கும்.


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை முடியும் வரை ராகுல் காந்தி நடந்தே செல்வார். நடைபயணம் முழுவதும் கண்டைனரிலேயே ராகுல் காந்தி தங்குகிறார். அதில், ஒரு படுக்கை, கழிப்பறை மற்றும் ஒரு ஏர் கண்டிஷனர் இருக்கிறது.