சிறந்த பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.


இயக்குநர்கள் மாநாடு:


மிருகக்காட்சி சாலை இயக்குனர்களின் தேசிய மாநாடு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.


இம்மாநாடனது அருகிவரும் இனங்களுக்கான இனப்பெருக்கத் திட்டங்களைத் திட்டமிடுதல், உயிரியல் பூங்காக்களில் அறிவியல் மேலாண்மையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு திறன் மேம்பாடு என்ற நோக்கத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 70-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.


சிறந்த பூங்கா:


இந்த மாநாட்டின் போது, உயிரியல் பூங்காவின் செயல்பாடு குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மிகப் பெரிய அளவு உயிரியல் பூங்காக்களுக்கான பிரிவுகளில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த உயிரியல் பூங்காவாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளை பெற்று மிகச் சிறந்த மதிப்பை பெற்றுள்ளது. இந்த மதிப்பீடானது வண்டலூர் உயிரியியல் பூங்கா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா:

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 

மீனகம் திறப்பு:


செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவிற்கு பிறகு பல்வேறு உயிரினங்கள் வாழ்விடம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. படிப்படியாக அவைகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மீனகம்  பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.



வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் மீனகம் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்று நோய் பரவியதால், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏழு விலங்கு இருப்பிடங்கள் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டன. ஏழு மூடிய இருப்பிடங்களில் ஆறு இருப்பிடங்கள் தொடர்ந்து படிப்படியாக ஒவ்வொன்றாக குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் இல்லம், பாம்புகள் இருப்பிடம், உட்சென்று காணும் பறவைக் கூடம், வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவை பார்வையாளர்களுக்காக 2022-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் மீனகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.