இந்திய அரசியலில் இது முக்கியமான ஆண்டு. மக்களவை தேர்தலுக்கு முந்தைய ஆண்டு என்பதால், இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.


தேர்தல் நடைபெற உள்ள முக்கியமான மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. தென்னிந்திய மாநிலங்களில் பாஜக ஆளும் ஒரே மாநிலமாக இருப்பது கர்நாடகா. இந்த மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.


தேர்தலுக்கு இன்னும் இரண்டே மாதங்களே உள்ள நிலையில், அங்கு அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரை கொல்ல வேண்டும் என இந்நாள் அமைச்சர் பேசியிருப்பது அங்கு உச்சக்கட்ட பரபரப்புக்கு வழிவகுத்துள்ளது.


"சித்தராமையாவை முடிச்சிருங்க":


மாண்டியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என். அஸ்வத் நாராயண், "முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை திப்பு சுல்தானை முடித்தது போல முடித்து விடுங்கள்" என பேசியுள்ளார்.


"உங்களுக்கு திப்பு [சுல்தான்] வேண்டுமா அல்லது [இந்துத்துவ சித்தாந்தவாதி VD] சாவர்க்கர் வேண்டுமா? இந்த திப்பு சுல்தானை எங்கே அனுப்புவது? நஞ்சே கவுடா என்ன செய்தார்? அதே வழியில் அவரை (சித்தராமையா) முடிக்க வேண்டும்" என அமைச்சர் பேசியுள்ளார்.


அமைச்சர் நாராயணனுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. முன்னதாக, சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல், அரசியலில் புதிய புயலை கிளப்பியிருந்தார். 


"கொல்ல வேண்டும்":


திப்பு சுல்தானின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரையும் கொல்ல மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். திப்பு சுல்தானின் வழித்தோன்றல்களை விரட்டியடித்து காடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்த பேச்சின் சர்ச்சை அடங்குவதற்கு முன்பே, அமைச்சர் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளார்.


வெறுப்பு பேச்சை கண்டித்துள்ள சித்தராமையா, அமைச்சர் நாராயணன் தன்னைக் கொல்ல மக்களைத் தூண்டிவிட முயன்றதாகக் குற்றம் சாட்டியதுடன், அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை வலியுறுத்தியுள்ளார்.


"திப்பு கொல்லப்பட்டது போல் என்னையும் கொல்லுங்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் நாராயண் வேண்டுகோள் விடுத்துள்ளார். அஸ்வத் நாராயண், ஏன் மக்களைத் தூண்டிவிடப் பார்க்கிறீர்கள்? துப்பாக்கியை நீங்களே எடுத்து வாருங்கள்" என சித்தராமையா பதிலடி அளித்துள்ளார்.


காலனித்துவ எதிர்ப்பின் வீரனாகக் கொண்டாடப்படும் திப்பு சுல்தான், கடந்த 1799ஆம் ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதி நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.


ஆனால், வலதுசாரிகள் வேறு விதமான வரலாற்றை முன்வைக்கின்றனர். திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு இறக்கவில்லை. ஆனால், வொக்கலிகா மன்னர்களான உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோரால் கொல்லப்பட்டார் என கூறுகின்றனர். இதை,வரலாற்றாசிரியர்கள் முற்றிலுமாக நிராகரிக்கின்றனர்.