ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் காதலன் அஃப்தாப் மீது கொலை வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ஸ்ரத்தா கொலை வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஃப்தாப் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும்,  அடையங்களை மறைக்க முயற்சி செய்த பிரிவின் கீழ் வழக்கு பதியவும் உத்தரவிட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை காதலன் அப்தாப் மறுத்த நிலையில் விசாரணை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷ்ரத்தாவும், அஃப்தாபும் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள், பிறகு ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். பிறகு, அஃப்தாபின் சொந்த ஊரான மும்பைக்கு அருகில் உள்ள இடத்தில் சில மாதங்கள் ஒன்றாக தங்கி இருந்துள்ளனர்.  பின்னர்  கடந்த ஆண்டு மே மாதம் அவர்கள் டெல்லிக்குச் சென்று அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். டெல்லி சென்ற ஒரு சில வாரங்களிலயே அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிரச்சனை கொலையில் முடிந்துள்ளது.


ஷ்ரத்தாவின் காதலை அவரது குடும்பத்தினர் ஏற்காததால், பெற்றோர் மகளை தொடர்புகொள்ளாமல் இருந்துள்ளனர். ஷ்ரத்தாவின் தோழி ஒருவர் கேட்டுக்கொண்ட நிலையில் ஷ்ரத்தாவின் தந்தையான விகாஸ் வாக்கர், மகளை பார்க்க டெல்லி சென்றுள்ளார். அங்கு மகள் இல்லாததால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அஃப்தாபை தேடிய போலீசார் கடந்த ஆண்டு அக்டோபரில் அவரை அவரது சொந்த ஊரில் கைது செய்தனர். விசாரணையில் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஷ்ரத்தாவை கொலை செய்த அஃப்தாப், அவரது உடலை துண்டுகளாக நறுக்கி பல்வேறு இடங்களில் வீசிய நிலையில், போலீசார் பல்வேறு துண்டுகளை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு மூலம்  அது ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்தினர்.


இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஷ்ரத்தா கொலை வழக்கில் அஃப்தாப் ஆமின் பூனவல்லாவுக்கு எதிராக டெல்லி போலீசார் 6,629 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் இணை ஆணையர் மீனு சவுத்ரி, ''ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக தோறாயமாக 6 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். இதில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 150-க்கும் மேற்பட்டவர்களிடம் பெற்ற அறிக்கையை இணைத்துள்ளதாக தெரிவித்தார். 


சம்பவத்தன்று ஷ்ரத்தா தனது நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். இது அஃப்தாபுக்குப் பிடிக்கவில்லை. இதனால், ஏற்பட்ட கோபத்தில் அவர் ஷ்ரத்தாவை கொலை செய்ததும் காவல் துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.