டெல்லி சதார் பஜாரில் கர்வா சௌத் அலங்கார வளையல்களை திருடியதாக உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கர்வா சௌத் என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின்போது, இந்து பெண்கள் அலங்கார வளையல்களை அணிவது வழக்கம்.
அலங்கார வளையல்கள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திலேயே குற்றம்சாட்டப்பட்டவர் பிடிக்கப்பட்டுள்ளார்.
சதர் பஜாரில் இருந்து தான் வாங்கிய 20 அலங்கார வளையல்களை யாரோ திருடிச் சென்றதாக நரேஷ் குமார் குப்தா என்பவர் கூறியதை அடுத்து இந்த விஷயம் புதன்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அலுவலர் சாகர் சிங் கல்சி கூறுகையில், "கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவாலியில் வசிக்கும் குப்தா, சாக்குப்பைக்குள் வளையல்களை எடுத்து கொண்டு எம்சிடி பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் சென்றுள்ளார். அங்கு வளையல்கள் திருடப்பட்டுள்ளது.
திருட்டு வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வாகன நிறுத்துமிடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, ஒருவர் வளையல்களை திருடுவது பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து விசாரணை நடத்தியதில், குற்றவாளி தனது பைக்கில் வந்து வளையல்களை பறித்து சென்றது தெரியவந்தது.
அவரது பைக் பற்றிய விவரங்களைப் கேட்டறிந்த பின்னர், குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் நொய்டாவில் மளிகை கடை நடத்தி வரும் 28 வயதான நவ்நீத் குமார் சிங் என அடையாளம் காணப்பட்டார். அவர் சதார் பஜார் மார்க்கெட்டுக்கு ஷாப்பிங் செய்யச் சென்றதாகவும், கர்வா சௌத் வளையல்கள் நிரம்பியிருந்த பேக் கவனிக்கப்படாமல் இருப்பதை தான் கவனித்ததாகவும் விசாரணையில் அவர் தெரிவித்தார்.
தனது கடையில் அந்த வளையல்களை விற்க நினைத்த அவர், அவற்றை திருட முடிவு செய்துள்ளார்.