ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் நகரில் பயங்தரவாதிகளுடனான மோதலின்போது படுகாயம் அடைந்த ராணுவ நாயுக்கு சிகிக்கை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உயிரிழந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.


இதுகுறித்து ராணுவ தரப்பு, "ஜூம் என்ற ராணுவ நாய், அட்வான்ஸ் ஃபீல்ட் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தது. காலை 11:45 மணி வரை நன்றாக இருந்தது. பின்னர், திடீரென மூச்சுத்திணறல் காரணமாக சரிந்து விழுந்தது" என தெரிவித்துள்ளது.


 






அனந்த்நாக்கின் கோகர்நாக்கில் நடந்த மோதலில் அந்த ராணுவ நாய் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குண்டுகள் அந்த நாயின் மீது பாய்ந்தது. இதன் விளைவாக, அது படுகாயம் அடைந்தது.


"காயங்கள் இருந்தபோதிலும், அந்த நாய் ராணுவ பணியைத் தொடர்ந்தது. நாயின் வீர தீர செயலால் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரில் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது" என்றும் ராணுவம் குறிப்பிட்டிருந்தது. ஆபரேஷன் டாங்பாவாஸின் ஒரு பகுதியாக ராணுவ நாய் ராணுவ பணியில் ஈடுபட்டிருந்தது. 


அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். 'ஜூம்' தவிர இரண்டு ராணுவ வீரர்களும் என்கவுண்டரில் காயமடைந்தனர்.


பல ஆண்டுகாலமாக நாய்களை குறிப்பாக மோப்ப சக்தி அதிகம் உள்ள நாய்களை ராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது என்பது ஒரு பொதுவான விஷயம். நாய்கள் மனிதர்களை விடவும் புத்தி கூர்மை அதிகம் உள்ளவை. ராணுவ வீரர்கள் செல்ல முடியாத இடத்திற்கு செல்லவும், கண்காணிக்கவும், ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மோப்ப நாய்களை பயன்படுத்தப்படுகின்றன. 


இந்த நாய்களுக்கு ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் கற்று கொடுக்கப்படும். இது போன்ற பல முக்கிய பங்கு வகிக்கும் ராணுவ நாய்கள் சில சமயங்களில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாவதும் உண்டு. 


இதே போன்று, ஜூலை 31ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்த்து நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது இந்திய ராணுவ நாய் ஆக்ஸல் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.