வட இந்தியாவில் குறிப்பாக பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் துப்பாக்கி கலாச்சாரம் கொடிக்கட்டி பறக்க தொடங்கிவிட்டது. பிறந்தநாள் விழா, திருமண விழா என அனைத்திலும் துப்பாக்கி குண்டுகள் முழங்குவது அந்த பகுதியில் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்பத்தில் வேட்டையாட வேண்டும் என துப்பாக்கியை பயன்படுத்தியவர்கள் , பின்னர் தங்களின் பாதுகாப்பு நலன் கருதி துப்பாக்கியை வைத்துக்கொண்டனர். ஆனால் அந்த காலம் எல்லாம் மாறி இன்று துப்பாக்கி வைத்திருப்பவர்தான் மாஸ் என்பது போல கௌரவ அடையாள சின்னமாகவே மாறியிருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் முழங்குவதால் ஏதோ ஒரு களிப்பு, கொண்டாட்டம் என்று நாம் கடந்து போகவும் முடியாது. ஏனென்றால்  அந்த குண்டுகள் பல உயிர்களை இரையாக்கிக்கொள்கின்றன. இதனால் அந்த பகுதியில் பலரும் கேளிக்கை, கொண்டாட்டம் என்றாலே அச்சத்தில் உறைந்து விடுவதாக வட இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


 






இந்த நிலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, மேடையில் நடனமாடும் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பீகாரில் உள்ள சிவான் நகரில் உள்ள கொண்டாட்டம் ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் சிகப்பு நிற லெஹங்கா அணிந்த பெண் , பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு சுழன்று சுழன்று நடனமாட, அவருடன் இணைந்து அந்த பகுதி இளைஞர்களும் நடனமாடுகின்றனர். அந்த பெண்ணின் கையில் இருக்கும் துப்பாக்கி அவ்வபோது இளைஞர்களை குறி பார்த்துவிட்டு செல்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த பெண் ஒரு நடன கலைஞர் என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. தனது பாதுகாப்பு நலன் கருதி அவர் துப்பாக்கியை எடுத்து வந்தாரா அல்லது அங்கிருந்தவர்களுள் யாரும் பெண்ணுக்கு துப்பாக்கியை கெத்து என நினைத்து கொடுத்தார்களா தெரியவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.



வட இந்தியர்கள் துப்பாக்கியை திருமண விழாக்களில் ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றன. இப்படியான அச்சுறுத்தலை தடுக்க , கடந்த 2019 ஆம் ஆண்டு ஆயுத சட்ட திருத்தத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் திருமண விழாக்களாக இருந்தாலும், பிறந்த நாள் விழாக்களாக இருந்தாலும் அல்லது மற்ற பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அங்கு உரிமம் பெற்ற துப்பாக்கியை கூட பயன்படுத்துவது சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டது. மீறினால் அவர்களுக்கு அபராதத்துடன் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என சட்டவிதிகள் இருப்பதும் நினைவு கூறத்தக்கது.