NIA : 873 கேரள போலீசாருக்கு பி.எஃப்.ஐ. அமைப்பினருடன் தொடர்பு..! என்.ஐ.ஏ. அறிக்கையால் அதிர்ச்சி..
பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் 837 கேரள போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் 873 போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை தேசிய புலனாய்வு முகமை கேரளா மாநில காவல்துறை தலைமைக்கு அதாவது கேரள டி.ஜி.பி.க்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், 873 காவல்துறை அதிகாரிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் வரை உள்ள காவல்துறையினர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பட்டியலில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரிடமும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. மேலும், அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த 873 அதிகாரிகளும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கு முக்கிய தகவல்களை அளித்து வந்ததாகவும் என்.ஐ.ஏ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 837 போலீஸ் அதிகாரிகள் என்.ஐ.ஏ.வின் சோதனை மற்றும் அமலாக்கத்துறை சோதனை தகவல்களை பி.எஃப்.ஐ. நிர்வாகிகளுக்கு அளித்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் முக்கிய ஆவணங்களை மறைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு 873 காவல்துறை அதிகாரிகள் உதவியதாக என்.ஐ.ஏ. அளித்த அறிக்கையால் பெரும் பரபரப்பு அந்த மாநில காவல்துறையில் நிலவியுள்ளது.
முன்னதாக, மத்திய அரசு கடந்த மாதம் 28-ந் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், சட்டவிரோத நடவடிக்கைகள், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக என்.ஐ.ஏ. அளித்த அறிக்கையின்படியே மத்திய அரசு தடை விதித்தாக அறிவிக்கப்பட்டது.
பி.எஃப்.ஐ. எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் உள்ள 17 மாநிலங்களில் இயங்கி வந்தது. மத்திய அரசின் தடையால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.