ஐதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம் வாட்ஸ்அப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முழு டிஜிட்டல் பேமெண்ட் வசதியுடன் கூடிய வாட்ஸ்அப் இ-டிக்கெட் வசதியை அறிமுகப்படுத்திய முதல் மெட்ரோ ரயில் என்ற பெருமை ஐதராபாத்திற்கு உண்டு.
Billeasy டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ,இந்த வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கட்டண வசதி குறித்து பேசிய எல்&டி மெட்ரோ ரெயில் (ஹைதராபாத்) லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கேவிபி ரெட்டி, “ஹைதராபாத் மெட்ரோ ரெயில் டிஜிட்டல்மயமாக்கலின் சக்தியை நம்புகிறது. டிஜிட்டல் இந்தியா பணிக்கு ஏற்ப, முழு டிஜிட்டல் கட்டண நுழைவாயிலுடன் இந்தியாவின் முதல் மெட்ரோ வாட்ஸ்அப் eTicketing வசதியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் ”என்றார்.
ஒரு வேளை நீங்கள் ஐதராபாத்திற்கு செல்ல விருப்பமுள்ளவராக இருந்தாலோ அல்லது அங்கு பணிபுரிபவர்களாக இருந்தாலோ இந்த வசதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . எப்படி வாட்ஸ்அப்பினை பயன்படுத்தி மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- முதலில் உங்கள் வாட்ஸ்அப்பில் +91 8341146468 என்ற எண்ணை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- பின்னர் அந்த எண்ணின் சாட் பக்கத்தை திறந்து , ‘ஹாய்’ என செய்தியை அனுப்ப வேண்டும். அல்லது மெட்ரோ நிலையங்களில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செயவதன் மூலம் நேரடியாக நீங்க முன்பதிவு செய்யும் பக்கத்திற்கு அழைத்துச்செல்லப்படுவீர்கள்.
- இ-டிக்கெட் முன்பதிவு இணைப்புடன், ஐந்து நிமிடங்களுக்கு செல்லுபடியாகும் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெறுவீர்கள்
- இ-டிக்கெட் கேட்வே இணையப் பக்கத்தைத் திறக்க, அந்த டிக்கெட் முன்பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
- உங்கள் பயண வழியை தேர்வு செய்யவும். அதாவது எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை பதிவு செய்துக்கொள்ளுங்கள். மற்றும் பயண வகையை தேர்வு செய்யவும். அதாவது ஒரு வழியா , அல்லது திரும்பி மெட்ரோ சேவையைத்தான் பயன்படுத்தி , திரும்பி வருவீர்களா (one-way or return) என்பதை குறிப்பிட்டுக்கொள்ளுங்கள்.
- Google Pay, PhonePe, Paytm, Rupay டெபிட் கார்டு அல்லது வேறு ஏதேனும் கட்டண விருப்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி உள்ளது. உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.
- இப்போது உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் மெட்ரோ இ-டிக்கெட் இணைப்பு கிடைக்கும். ஒரு வேளை நீங்கள் QR மூலம் மின் கட்டணத்தை பெற பதிவு செய்திருந்தால் , பதிவிறக்கம் செய்யும் வசதியை பெறுவீர்கள்.
- தானியங்கி கட்டண சேகரிப்பு (AFC) வாயிலில் QR இ-டிக்கெட்டை ப்ளாஷ் செய்து உங்கள் பயணத்தைத் தொடரலாம்.