கோயம்பேடு பேருந்து நிலையம்
சென்னையில் பிரதான பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மிக முக்கிய பேருந்து நிலையமாக விளங்கிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. சென்னையில் உள்பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தால் குறிப்பாக தொடர் விடுமுறை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலுக்கு..
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் (Kilambakkam) ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2021ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது
ஆனால் நிலம் கையகப்படுத்துதல், தொல்பொருள் பகுதி என்பதால் எழுந்த சிக்கல், கொரோனா பெருந்தொற்று, ஊழியர்கள் பற்றாக்குறை, கட்டுமானப் பணிகளில் தாமதம், முதன்மை பீடத்தில் வேலைகள் முடிவடையாதது என இழுபறியாய் சென்று கொண்டு, இருந்தது. தற்பொழுது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து பணிகளை குறித்து நேரடியாக கண்காணித்து பணிகளை முடிக்க துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் அவப்போவது, துறை அதிகாரிகளும் அமைச்சர்களும், தொடர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை வேகப்படுத்தினர். இப்பொழுது பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. விரைவில் பேருந்து முனையம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன