2019 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் நாட்டில் சுமார் 13.13 லட்சம் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் அதனை தொடர்ந்து  மேற்கு வங்காளத்தில் 1.56 லடசம் பேர் காணமல் போயுள்ளனர் என்று  உள்துறை அமைச்சகம் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது.


2019 முதல் 2021 வரை நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 2,51,430 சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ஜூலை 26 அன்று ராஜ்யசபாவில் தெரிவித்தார். "2019 ஆம் ஆண்டில், காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 82,084 மற்றும் 3,42,168 ஆகவும், 2020 ஆம் ஆண்டில், 79, 233 சிறுமிகளும், 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளனர்" என்று கூறியுள்ளார்.


தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இணையத்தில் இருக்கும் தரவுகளின்படி, “ 2019 ஆம் ஆண்டில் 82,619 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர், அதில் 49,436 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதே ஆண்டில், 3,29,504 பெண்கள் காணாமல் போயுள்ளனர், அதில் 1,68,793 பேர் மீட்கப்பட்டனர். 2020 ல் 79,233 சிறுமிகளும் 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 2,24,043 பெண்கள் மீட்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு மீட்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. 2021 ஆம் ஆண்டில், 90,113 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் மற்றும் 58,980 பேர் மீட்கப்பட்டனர். 3,75,058 பெண்கள் காணாமல் போயுள்ளனர், 2,02,298 பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என தெரியவந்துள்ளது.   


மத்தியப் பிரதேசத்தில் 2019 முதல் 2021 வரை 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் தொகுக்கப்பட்டு, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதே காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து 1,56,905 பெண்களும், 36,606 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்களும், 13,033 சிறுமிகளும் இந்த காலகட்டத்தில் காணாமல் போயுள்ளனர். ஒடிசாவில், மூன்று ஆண்டுகளில் 70,222 பெண்களும், 16,649 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் சத்தீஸ்கரில் இருந்து 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் 2019 முதல் 2021 வரை 43,529 பெண்களும், 14,391 சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 


யூனியன் பிரதேசங்களில், காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. தேசிய தலைநகரில், 2019 மற்றும் 2021 க்கு இடையில் 61,054 பெண்களும் 22,919 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் 8,617 பெண்களும் 1,148 சிறுமிகளும் காணவில்லை. "பெண்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது, இதில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக திறம்பட தடுப்பதற்காக குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013 இயற்றப்பட்டுள்ளது" என்று உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும், குற்றவியல் சட்டம் (திருத்தம்), 2018 ன் படி,  12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை உட்பட இன்னும் கடுமையான தண்டனை விதிகளை பரிந்துரைப்பதற்காக இயற்றப்பட்டது,” என்று அவர் கூறினார்.