மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் பயணித்தவர்களை ஆர்.பி.எஃப் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஸ்ட்ரா மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.


இதைப்பார்த்த சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், அதில் ஒரு ஆர்பிஎஃப் காவலர் மற்றும் மூன்று பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேரை சுட்டுவிட்டு தஹிசார் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்த ஆர்பிஎஃப் காவலரை அங்கிருந்த காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அந்த வீரரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளது. 


இதையடுத்து பிடிபட்ட வீரரிடம் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.பி.எஃப் வீரர் ஒருவரே ரயில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடைபெற்ற ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் மும்பை செண்ட்ரல் ரயில் நிலையத்தை எட்டியுள்ளது.