ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகும் கூட இந்தியாவின் சில பகுதிகள் மன்னராட்சியின் கீழ் இருந்தது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


சுதந்திர இந்தியா:


1947 இல் ஒருங்கிணைந்த இந்தியா சுதந்திரமடைந்தபோது ஆயிரக்கணக்கான ஜமின்தார்களும், ஜாகிரிஸ்கள் இருந்தாலும்,  565 சமஸ்தானங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக  அங்கீகரிக்கப்பட்டன. 21 மாநிலங்கள் மட்டுமே உண்மையான அரசாங்கங்களைக் கொண்டிருந்தன. 


நேரு கொடுத்த எச்சரிக்கை..!


1946ம் ஆண்டு ஜுலை மாதம் பேசிய நேரு, சுதந்திர இந்தியாவின் ராணுவத்திற்கு எதிராக எந்தவொரு சமஸ்தானமும் ராணுவ ரீதியாக வெற்றிபெற முடியாது என்பதை சுட்டிக்காட்டினார். அதோடு, 1947ம் ஆண்டு ஜனவரி மாதம்,  சுதந்திர இந்தியா மன்னர்களுக்கு இருக்கும் தெய்வீக உரிமையை ஏற்காது என்று தெரிவித்தார் . இறுதியாக 1947-ம் ஆண்டு மே மாதம் அரசியலமைப்புச் சபையில் சேர மறுக்கும் எந்தவொரு சுதேச அரசும் எதிரி நாடாகக் கருதப்படும் என்று நேரு அறிவித்தார்.


இந்தியா, பாகிஸ்தானில் இணைந்த சமஸ்தானங்கள்:


நேரு எச்சரிக்கையை தொடர்ந்து, சமஸ்தானங்களின் சகாப்தம் 1947 இல் இந்திய சுதந்திரத்துடன் திறம்பட முடிவடைந்தது.  1950 வாக்கில் ஏறக்குறைய அனைத்து சமஸ்தானங்களும் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்தன. ஆனால், ஒரு சில சமஸ்தானங்கள் மட்டும் தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட விரும்பின. ஆனால், பல்வேறு நீண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு அந்த சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைந்தன. அவற்றின் விவரங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஜம்மு & காஷ்மீர்:


சுதந்திரத்திற்குப் பிறகும் தன்னாட்சியுடன் செயல்பட விரும்பிய ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தின் மீது பாகிஸ்தான் படையெடுத்தது. இதையடுத்து,  குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகள் வழங்குவதற்கான ஒப்பந்தத்துடன், 1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி  இந்தியா உடன் ஜம்மு & காஷ்மீர் இணைந்தது.


ஐதராபாத்:


சமஸ்தானங்களிலேயே அதிக சிக்கல் கொண்டதாக ஐதராபாத் திகழ்ந்தது. இந்தியாவின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய நிலப்பரப்பை ஐதராபாத் சமஸ்தானம் கொண்டிருந்தது.  சுதந்திரத்தின் போது மிகப்பெரிய இந்து மக்கள் தொகை கொண்ட இப்பகுதி நிசாம் மிர் உஸ்மான் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் சுதந்திரத்தின் போது ஐதராபாத் சமஸ்தானத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்தார். இந்தியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய அரசாக திகழ்ந்த ஐதராபாத்தின் நிஸாமுக்கு ஜின்னாவின் முழு ஆதரவு இருந்தது. இதற்கிடையில் அங்கு தனிநாடு தொடர்பான கலவரங்களும் ஏற்பட்டன. இதையடுத்து 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி ஆபரேஷன் போலோ என்ற பெயரில் இந்திய ராணுவம் ஐதராபாத் சென்றது. அப்போது நடைபெற்ற 4 நாள் போரின் முடிவில் ஐதரபாத் முழுமையாக இந்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 


திருவிதாங்கூர்:


கடல்சார் வணிகத்திலும், மிகப்பெரிய கனிம வளங்களையும் கொண்ட பகுதியாக திருவிதாங்கூர் சமஸ்தானம் விளங்கியது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைய மறுத்த முதல் சமஸ்தானமும் இதுதான். திருவிதாங்கூர் திவான் சர் சிபி ராமசாமி ஐயரை, டெல்லிக்கு நேரில் அழைத்து நேரு சமாதானம் செய்ய முயன்றார். ஆனாலும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர் ஒப்புக் கொள்ளவில்லை. பின்பு கேரள சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் உயிர் பிழைத்தபோதுதான், ராமசாமி ஐயர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.  அதன்படி, 1947 ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.


 ஜோத்பூர்:


அதிகளவிலான இந்து மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும், இந்து அரசரால் ஆளப்பட்ட இந்த ராஜ்புட்  சமஸ்தானத்தின் இளவரசர் மஹாராஜா ஹன்வந்த் சிங், முதலில் பாகிஸ்தானுடன் இணைய முடிவுசெய்திருந்தார். புதிதாக உருவாக்கப்படும் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதியில் ஜோத்பூர் அமைந்திருந்ததால், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்ததோடு,  ஜின்னா அளித்த சில சலுகைகள் இதற்கு காரணமாக இருந்தது. இதுதொடர்பாக அறிந்த நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல்,  பாகிஸ்தானுடன் இணைந்தால் ஏற்படும் சிக்கல்களை விளக்கியதோடு, இந்தியாவுடன் இணைந்தால் ஏற்படும் சாதகங்கள் குறித்தும் இளவரசருக்கு எடுத்துரைத்தார். மேலும், சில சலுகைகளையும் முன்வைத்தார். அதன் பின்னர்  ஜோத்பூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது.


ஜுனாகத் சமஸ்தானம்:


குஜராத்தில்  இருந்த ஜூனாகத் சமஸ்தானமும் சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைய மறுத்தது. 3-ஆம் முஹம்மது மஹாபத் கான்ஜி ஆட்சியின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த சமஸ்தானம்,  பாகிஸ்தானின் கீழ் செயல்பட  தீவிரமாக முனைப்பு காட்டியது. இவர்களின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதற்கு இந்திய அரசு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அது ஜின்னா செய்துகொண்ட இரு நாடுகளின் ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியது. அப்போது ஏற்பட்ட இந்த இடையூறுகளின் காரணமாக ஜுனாகத் சமஸ்தானத்தின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதன் நவாப் கராச்சி சென்று தஞ்சமடைந்தார். அச்சமயம் இவ்விவகாரம் தொடர்பாக வல்லபாய் படேல், ஜூனாகத் சமஸ்தானத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தானிடம் வலியுறுத்தினார். அதில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது. மேலும் 1948 பிப்ரவரி 20-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது 91 சதவீதம் பேர் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். எனவே ஜூனாகத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது.


போபால்:


அதிகளவிலான இந்து மக்கள் தொகை கொண்ட போபால் சமஸ்தானமும் இஸ்லாமிய நவாப் ஹமிதுல்லா கான் அரசவையின் கீழ் ஆட்சி செயல்பட்டு வந்தது. முஸ்லீம் லீக்கின் மிக நெருங்கிய நண்பரான இவர்,  காங்கிரஸ் ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் போபால் சமஸ்தானத்துக்கு தனி சுதந்திரம் வழங்குமாறும் மௌன்ட் பேட்டனிடம் கோரிக்கை வைத்தார். ஆனாலும் இதர மன்னர்கள் இந்தியாவுடன் இணைய சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், 1947 ஜூலை மாதம் போபால் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய சம்மதம் தெரிவித்தார்.


காலட் சமஸ்தானம்:


காலட் சமஸ்தானமும் தொடக்கத்தில் தன்னாட்சியை தொடர விரும்பி,  1947ம் ஆண்டு தங்களை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. இருப்பினும், 1948ம் ஆண்டு காலட் சமஸ்தானம் தங்களை பாகிஸ்தான் உடன் இணைத்துக் கொண்டது.


இரும்பு மனிதர்:


இந்தியாவுடன் இணைய மறுத்து முரண்டு பிடித்த மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு சமஸ்தானங்களையும், இந்தியாவுடன் இணைத்ததில் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் முக்கிய பங்கு வகித்தார். இதன் காரணமாக தான் அவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.