திருப்பதி மலைப்பாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பதி கோயில்:


ஆந்திர மாநிலம் திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பேருந்து மூலமாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் பயணம் மேற்கொள்ளுஇம் சூழலில், ஏராளமான பக்தர்கள் மலைப்பாதை வழியாக படிகட்டுகள் மூலமாக ஏறியும் திருமலைக்கு செல்கின்றனர்.  அந்த வகையில், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் தான் தற்போது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காணாமல் போன சிறுமி:


ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவூர் மண்டலத்தின் போத்தி ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். அவர் தனது மனைவி சசிகலா மற்றும்  மகள் லக்ஷிதா ஆகியோருடன் சேர்ந்து,  நேற்று இரவு 7.30 மணி அளவில் திருமலைக்கான அலிபிரி நடைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். நரசிம்ம சாமி கோயில் அருகே நடந்து சென்ற போது லக்ஷிதா திடீரென காணாமல் போக, பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடியுள்ளனர். நீண்ட நேரமாகியும் லக்ஷிதா  கிடைக்காததால் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் தொடங்கினர்.






சிறுமியை கொன்ற சிறுத்தை:


மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது,  சிறுமி தனது பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனடிப்படையில்  கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடுதல் பணி தொடர்ந்த நிலையில்,  காலை 7 மணி அளவில் சிறுமி லக்ஷிதாவின் உடல் நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் சாணம் கிடந்தது. இதனால் சிறுத்தை தான் சிறுமியை இழுத்துச் சென்று அடித்து கொன்று இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


அடுத்தடுத்த சம்பவங்கள்:


பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக்கில் சென்று கொண்டு இருந்த காவலர் மற்றும் பக்தர் மீது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். கடந்த மாதம் அலிபிரி நடைபாதையில் குடும்பத்தினருடன் நடந்து சென்று கொண்டு இருந்த 3 வயது சிறுவனை திடீரென சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது. பக்தர்கள் சிறுத்தை மீது கல்வீசி தாக்கியதால் குழந்தையை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதால், பக்தர்களுக்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.