மத்திய அரசின் புதிய தண்டனை சட்டங்கள் பெண்களுக்கு எதிரான குற்றம் இழைப்பவர்களுக்கு, கடும் தண்டனையை விதிக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


புதிய தண்டனை சட்டங்கள்:


இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றி, புதிய தண்டனை சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய ஆதார சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்ற வழிவகை செய்கிறது. அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை பாரதிய நியாய சங்ஹீத என மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக்  சுரக் ஷ சங்ஹீத மற்றும் இந்திய ஆதார சட்டத்தின் பெயரை பாரதிய சக் ஷயா என பெயரை மாற்ற இந்த மசோதாக்கள் பரிந்துரைக்கின்றன.


”பொய்யான வாக்குறுதிகளும் குற்றமே”


புதிய சட்டமசோதாக்கள் தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  ஏற்கனவே உள்ள இந்திய தண்டனைச் சட்டம் எண் 1860-க்கு மாற்றாக புதிய தண்டனைச் சட்டம் அமைந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நியாயம் கிடைக்க உதவும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விளக்கத்தில் ”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல சமூக பிரச்சனைகள் தொடர்பாக புதிய மசோதாவில் விவாதிக்கப்பட்டுள்ளன. இனி திருமணம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு மற்றும் தவறான அடையாளத்தின் கீழ் பொய்யான வாக்குறுதி அளித்து, பெண்களுடன் உறவு கொள்வது குற்றமாகிறது. திருமணம் செய்து கொள்கிறேன் என்பது போன்ற போலியான வாக்குறுதிகளை அளித்து, உடலுறவு கொண்டு ஏமாற்றியவர்களை தண்டிப்பதற்கு என இதுவரை எந்தவொரு தனிச்சட்டமும் இல்லை. இந்த நிலையில், தான் அதுவும் குற்றவரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


10 ஆண்டுகள் தண்டனை:


தற்போது நிலைக்குழுவின் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ள அந்த மசோதாவின்படி,  நிறைவேற்றும் எண்ணாம் இல்லாத வாக்குறுதிகளை அளித்து உடலுறவு கொண்டு பெண்களை ஏமாற்றுவது, பாலியல் வன்கொடுமையாக கருதப்படும். இதற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறை தணடனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம். வேலை வாங்கி தருவதாக கூறுவது, பதவி உயர்வு பெற்று தருவதாக கூறுவது, அடையாளங்களை மறைப்பது போன்றவையும் இந்த மோசடியில் அடங்கும்.


தண்டனை விவரங்கள்:


கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், மரண தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு, 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதிபட்சமாக மரண தண்டனையும் விதிக்கப்படலாம். ஒரு காவல்துறை அதிகாரி, அரசு ஊழியர் மற்றும் ஆயுதப்படை காவலர் யரேனும்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், அவருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்படும். அது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.


”விரைவான நீதியை வழங்கவும், மக்களின் சமகாலத் தேவைகள் மற்றும் நம்பிக்கையான சட்ட அமைப்பை உருவாக்கவும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டடுள்ளன” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.