மகாராஷ்டிராவில் கடந்தாண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை சரிந்து விழுந்து சுக்குநூறான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சரிந்து விழுந்த சத்ரபதி சிவாஜியின் சிலை: சிந்துதுர்க் மாவட்டம் ராஜ்கோட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, கடற்படை தின கொண்டாட்டங்களின்போது திறந்து வைத்தார். கடந்த சில நாட்களாகவே, மகாராஷ்டிராவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.


இந்த நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமான சத்ரபதி சிவாஜியின் சிலை கீழே விழுந்து சுக்குநூறாக போனது. சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் நேரில் சென்று சேதத்தை மதிப்பீடு செய்து வருகின்றனர்.


சிலை சரிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தை நிபுணர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையே சிலை சரிந்து விழுந்ததற்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சிலர் தகவல் கூறுகின்றனர்.


எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு: ஆனால், மாநில அரசின் அலட்சியமும் சிலையின் கட்டுமான தரம் மோசமாக இருந்ததாதவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டில், "சரிவர கவனிக்காததால், சிலை சரிந்து விழுந்துள்ளது.


இதற்கு, மாநில அரசே பொறுப்பு. பணியின் தரத்தில் அரசு கவனம் செலுத்தவில்லை. சிலையை திறப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்ட நிகழ்வை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. இந்த மகாராஷ்டிர அரசு புதிய டெண்டர்களை மட்டும் போட்டு, கமிஷன்களை வாங்கி கொள்கிறது. அதன்படி ஒப்பந்தம் கொடுக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.


 






இதற்கு விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிரா அமைச்சர் தீபக் கேசர்கர், "சம்பவம் பற்றிய அனைத்து விவரங்களும் என்னிடம் இல்லை. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சிந்துதுர்க் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ரவீந்திர சவான் கூறியுள்ளார்.


அதே இடத்தில் புதிய சிலை அமைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட இந்த சிலை, கடல் கோட்டையை கட்டுவதில் சிவாஜி மகாராஜின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்டப்பட்டது. இந்த விஷயத்தை விரைவாகவும் திறம்படவும் தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்றார்.