கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உண்மை கண்டறியும் சோதனையில் வெளியான பரபரப்பு தகவல்கள்: இச்சூழலில், இந்த வழக்கு தொடர்பாக 7 பேரிடம் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. சம்பவ தினத்தன்று கொல்லப்படுவதற்கு முன்பு மருத்துவருடன் இரவு உணவு சாப்பிட்ட 4 மருத்துவர்களிடமும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராயிடமும் சம்பவம் நடந்த கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இவர்களை தவிர சஞ்சய் ராயின் நண்பரிடமும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்த குற்றத்தை சஞ்சய் ராய் ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றம் நடப்பதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்பு, மது குடித்துவிட்டு தனது நண்பருடன் ரெட் லைட் ஏரியாவுக்கு சென்றதாகவும் ஆனால், அப்போது பாலியல் உறவில் ஈடுபடவில்லை என சோதனையின்போது சிபிஐ அதிகாரிகளிடம் சஞ்சய் ராய் கூறியுள்ளார்.
ரெட் லைட் ஏரியாவுக்கு சென்றாரா சஞ்சய் ராய்? பின்னர், தெருவில் நடந்து வரும்போது மற்றொரு பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். தனது காதலியை அழைத்து அவரது நிர்வாண புகைப்படங்களை கேட்டதாகவும் சஞ்சய் ராய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதிகாலை 4.03 மணியளவில் மருத்துவ கல்லூரியின் செமினார் ஹால் அருகே உள்ள காரிடாருக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கு மருத்துவரை பாலியல் வன்கொடுமையில் உள்ளாக்கி, கொன்றுவிட்டு தனது நண்பர் அனுபம் தத்தாவின் வீட்டிற்கு சஞ்சய் ராய் திரும்பியதாக காவல்துறை அதிகாரி கூறுகிறார்.
உண்மை கண்டறியும் சோதனையின்போது பொய்யான தகவல்களை சஞ்சய் ராய் அளித்ததாகவும் ஆனால் அவை அனைத்தும் சோதனையில் அம்பலமானதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
கொல்கத்தா மருத்துவர் வழக்கை கண்டித்து நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி பெண்கள் போராடி வருகின்றனர். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகே, சில மாநிலங்களில் பணிக்கு திரும்ப மருத்துவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.