ஏக்னாத் ஷிண்டே ஆதரவு எம்பிக்கள் 12 பேர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக புதிய அணி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


புதிய அதிருப்தி அணி:


மஹாராஸ்டிராவில் அமைந்திருந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான உத்தவ் தாக்கரே ஆட்சி சமீபத்தில் கவிழ்ந்து, அதிருப்தி அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்க, துணை முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், மக்களவையிலும் சிவசேனா எம்பிக்கள் அதிருப்தி தெரிவித்து, புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர்.




புதிய கொறடா:


தற்போது சிவனாவுக்கு 19 எம்பிக்கள் மக்களவையில் உள்ளனர். இவர்களில் 12 பேர் ஏக்னாத் ஷிண்டே அணிக்கு தாவ தயாராக இருப்பதாகத் தெரிகிறது. மக்களவையில் இந்த 12 பேரும் இணைந்து தனி அணி அமைக்க ஆயத்தமாகி வருகின்றனர். மும்பை தெற்கு மத்திய தொகுதி எம்பியான ராஹுல் ஷிவாலே தலைமையில் அணி செயல்படும் என்பதற்கான கடிதம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு புதிய கொறடா விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், புதிய கொறடாவாக பாவனா கவுலி நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தலைமை கொறடாவாக இருந்த கவுலி மற்றும் ஏக்னாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீ காந்த் ஆகியோர் அதிருப்தி அணிக்கு மாறியதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய அணியில் மீண்டும் அவருக்கே அந்த பொறுப்பு வழங்கப்படும் என்றுத் தெரிகிறது,


ஷிண்டேவுக்கு ஆதரவாகச் செல்லும் 12 பேர் கொண்ட அணியில் இரண்டு பேருக்கு அமைச்சர்கள் பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏக்னாத் ஷிண்டேவுடன் இருக்கும் சிவசேனா கட்சியின் அனைத்து எம்பிக்களும் பாஜகவின் முக்கியத் தலைவர்களை டெல்லியில் சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பின் போது நாடாளுமன்றத்தில் சிவசேனாவின் நிலை குறித்து விவாதிக்கவும், நாடாளுமன்ற அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ தீபக் கேசர்கார் கூறியுள்ளார்.


புதிய அமைச்சரவை:


மும்பைக்குச் செல்லும் முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே  அங்கு பாஜக முக்கியத்தலைவர்களை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகவும், மத்திய அமைச்சர் பதவி தொடர்பாகவும் பேசுவார். இந்த அமைச்சரவை பொறுப்பானது சில வாரங்களில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், மகாராஸ்டிர அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றிற்குப் பிறகு இது நடைபெறலாம் என்று ஏக்னாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ கூறியுள்ளார்.




சஞ்சய் ராவத் பதிலடி:


சிவசேனா எம்பிக்கள் யாரேனும் எதிர்ப்பு அணியில் இணைந்தாலோ அல்லது அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டாலோ அவர்கள் மீது சிவசேனா நிச்சயம் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளும். மக்களவையில் சிவசேனா கட்சி ஒற்றுமையாக இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், விதிகளை மீறிய எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதே போன்று விதிகளை மீறினால் எம்பிக்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். அவர்கள் அவர்களை காப்பாற்றிக் கொள்ளவும், குழப்பத்தை உருவாக்கவும் அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள். நாங்கள் சட்டப்பூர்வமாகப் போராடுவோம். தாங்கள் ராஜன் விசாரேவை தலைமை கொறடாவாக நியமித்திருப்பதாகவும், இந்த நியமனம் தான் செல்லத்தக்கது என்று சிவசேனா மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார்.


கோலப்பூர் தொகுதியைச் சேர்ந்த கோல்ஹாபூர் எம்பி,மண்ட்லிக் தான் முதன் முதலில் அவரது சக எம்பிக்களிடம் தனி அணியாக திரள்வது பற்றியும், ஷிண்டே அணிக்குத் தாவுவது பற்றியும் பேசியுள்ளார். உத்தவ் தாக்கரே தங்களுக்கு மூத்த அண்ணன் போன்றவர் என்றும்,  ஆனால் அவரது பணியாளர்களது கருத்துகளும் தேவை” என சஞ்சய் மண்ட்லிக் என்று அவர் கூறியுள்ளார்.