மகாராஷ்ட்ராவில் நாயின் கழுத்தில் கல்லைக் கட்டி வெள்ள நீரில் தள்ளி விட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பொதுமக்களில் உயிரினங்களை கொடுமைப்படுத்தும் செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு ஜூலை மாதம் நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் யானை மீது தீ வைக்கப்பட்ட டயரை வீசியதில் அதன் காது பகுதி பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. இதேபோல் 2020 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பில்ஷாபூர் மாவட்டத்தில் பசு மாட்டிற்கு வைக்கப்பட்ட உணவில் பட்டாசினை வைத்து கொடுத்து அதன் தாடை கிழிந்து ரத்தம் கொட்டிய புகைப்படங்களை காண்பவர்களை கண் கலங்க வைத்தது. இதேபோன்ற சம்பவங்கள் தமிழகத்திலும் நடந்தது.
இத்தகைய சம்பவங்கள் மூலம் கொடூர மனம் படைத்தவர்கள் மனம் மகிழ்ந்து போகும் செயல்கள் அரங்கேறி தான் வருகின்றது. இதனை பலரும் கண்டித்தாலும் அன்றாடம் நம்மை சுற்றிலும் உயிரினங்கள் மீதான தாக்குதல்கள் நடந்து தான் வருகிறது. அந்த வகையில் மகாராஷ்ட்ராவில் நாய் ஒன்று துன்புறுத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள பல்லார்பூர் தாலுகாவின் தஹேலி கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு ஓடும் ஆறு ஒன்றில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் செல்கிறது. அப்போது 3 சிறுவர்கள் ஒரு நாயின் கழுத்தில் கல்லைக் கட்டி வலுக்கட்டாயமாக தண்ணீருக்குள் இழுக்கின்றனர். நாயும் தண்ணீரில் விழுந்துவிடாமல் இருக்க எவ்வளவோ முயற்சியும் மேற்கொள்கிறது. ஆனால் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் நாயை தூக்கி தண்ணீரில் போடுகின்றனர். முதலில் தடுமாறும் நாய் பின்னர் சுதாரித்து தப்பித்து விடுகிறது.
இதன் வீடியோ காண்பவர்களை பதற வைக்கிறது. இதனையடுத்து விலங்கு நல ஆர்வலர் ஒருவர் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஐபிசி 11(1), 119 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்