ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில்-அம்பு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 






உச்சநீதிமன்றத்தில் விசாரணை:


ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில்-அம்பு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது.


உத்தவ் தாக்கரே தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


தடை விதிக்க மறுப்பு:


இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில்-அம்பு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது.




வழக்கு விபரம்:


மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் சிவசேனா கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தது. சிவசேனா கட்சி சார்பாக முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். பின்னர்,  தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக பிரிந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.


கட்சியின் பெரும்பாலான எம்.எல்,ஏ.க்களின் உதவியாலும், பாஜகவுடனான கூட்டணியாலும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.


கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன.


இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து, வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைக்காலத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.


இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான தரப்பு , உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யதது.


இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, 2 வார காலத்திற்குள் தேர்தல் ஆணையம் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Also Read: Su Venkatesan: 'மக்களை கேவலப்படுத்தியது நீங்கள்.. ராஜ்பவனில் பெற்ற பயிற்சியா இது?' வலுக்கும் தமிழிசை - சு.வெங்கடேசன் மோதல்..!