டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


மல்யுத்த வீரர்களுக்கு குவியும் ஆதரவு:


பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சூழலில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர் விவசாயிகள். போராட்டத்திற்கு ஆதரவாக ஜந்தர் மந்தரை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர்.


இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகளுக்கு முக்கிய சீக்கிய அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிரோமணி குருத்வாரா நிர்வாகக் குழு நேற்று அறிவித்துள்ளது.


"கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்"


இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறுகையில், "இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, பெண்களின் கெளரவம் மற்றும் கண்ணியம் தொடர்பானது. ஒருபுறம் ‘பேட்டி பச்சாவோ’, பெண்களின் முன்னேற்றம் என்று அரசு பேசுகிறது. 


மறுபுறம் நாட்டிற்கு ஒலிம்பிக் பதக்கங்களைக் கொண்டு வந்த வீராங்கனை நீதி கிடைக்கப் போராடுகிறார்கள். சீக்கிய அமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைக்கு ஆதரவளிக்கிறது. டெல்லியில் போராட்டக்காரர்களை சந்திக்க விரைவில் தூதுக்குழுவை அனுப்புவோம்" என்றார்.


பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக கடந்த மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவரது வாக்குமூலத்தை டெல்லி காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் பதிவு செய்தனர். பாலியல் புகார்கள் தொடர்பாக அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.


ஐபிஎல் போட்டி பார்க்க சென்ற வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு:


விசாரணையின்போது, தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் இந்த வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.


மல்யுத்த வீரர்கள், நேற்று கவனம் ஈர்க்கும் விதமாக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திற்கு ஐபிஎல் போட்டி பார்க்க சென்றனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்திற்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள், வெளியில் நின்று கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.