Chandrayaan 3: ஐஐடி அல்ல.. சிஇடி கல்லூரியில் படித்தவர்களே நம்மை நிலவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.. சசி தரூர் பாராட்டு

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பொறியியல் கல்லூரியில் படித்து, சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்டது தான் சந்திரயான் 3 விண்கலம். கடந்த ஜுலை மாதம் 14ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்தது. 

Continues below advertisement

பின்பு நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டது. 

40 நாட்கள் பயணத்தை தொடர்ந்து கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணியளவில், திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் வெற்றிகரமாக தடம்பதித்த நான்காவது நாடு மற்றும் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

மகத்தான சாதனை படைத்த இந்தியா:

விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, மகத்தான சாதனை படைத்துள்ள இந்தியாவுக்கு உலக தலைவர்கள் தொடங்கி உலகின் முன்னணி விஞ்ஞானிகள் வரை பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சந்திரயான் வெற்றியை பொறுத்தவரையில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதில் பணியாற்றிய பெரும்பாலான விஞ்ஞானிகள் அரசு பாட கல்வி திட்டத்தில் பயின்றவர்கள்.

ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் பயிலாமல் மாநில அரசின் கல்லூரிகளில் படித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 
குறிப்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பொறியியல் கல்லூரியில் படித்து, சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாநில கல்வி பாடத்திட்டத்தில் படித்து அசத்திய விஞ்ஞானிகள்:

இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "இஸ்ரோ தலைவர் டாக்டர் சோமநாத், கேரளா கொல்லத்தில் உள்ள டிகேஎம் பொறியியல் கல்லூரியின் தயாரிப்பு. அவரது சக விஞ்ஞானிகள் பலர் திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் (CET) பட்டம் பெற்றுள்ளனர். சந்திரயான் வெற்றியில் CET கல்லூரியில் படித்த ஏழு பொறியாளர்கள் பங்காற்றியுள்ளனர்.

இந்தியர்கள் ஐஐடிகள் மீது ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், பொதுத் துறைக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் தேசிய நிறுவனங்களின் முதுகெலும்பாக இருக்கும் பாராட்டப்படாத பொறியியல் கல்லூரிகளின் முன்னாள் மாணவர்களுக்கு தலை வணங்குவோம். ஐஐடியினர் சிலிக்கான் பள்ளத்தாக்குக்குச் சென்றுவிடுகின்றனர். ஆனால், CETயில் படித்தவர்கள்தான், நம்மை நிலவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, விக்ரம் லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்குப் பிறகு, அதனுள் இருந்த பிரக்யான் ரோவர் வெளியேறியது. அதுதொடர்பான காட்சிகளை தான் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பல்வேறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. 

இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம்,  கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன. 

Continues below advertisement
Sponsored Links by Taboola