கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி நகராட்சியில் ஜீப் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கேரள வயநாட்டில் விபத்து:
மானந்தவாடியில் உள்ள தோட்டமொன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் தலாப் பகுதியில் கண்ணோத் மலைக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மாலை 4:30 மணிக்கு நடந்துள்ளது. இந்த விபத்தில் ஜீப் முற்றிலும் சேதமடைந்தது. கீழே விழுந்ததில் வாகனம் இரண்டு துண்டுகளாக உடைந்தது.
மற்ற தொழிலாளர்கள் வேலையிலிருந்து திரும்பும் வழியில் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். அங்கு, ஐந்து பேர் ஏற்கனவே உயிரிழந்திருப்பதை அவர்கள் கண்டுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர்கள் அனைவரும் வயநாட்டை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
ஜீப்பில் பயணித்த 13 பேரில் பெரும்பாலானோர் பெண்கள். அதேபோல, இறந்தவர்களில் 6 பேர் பெண்கள். ராணி, சாந்தி, சின்னம்மா, லீலா, ரபியா மற்றும் ஷீஜா என அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தலப்புழா அருகே உள்ள மக்கிமலையைச் சேர்ந்தவர்கள். மேலும் பலியானவர்களின் கூடுதல் விவரங்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை.
காயமடைந்தவர்கள் வயநாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிஞ்சல் பஞ்சாயத்து தலைவர் எல்சி ஜாய் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் இறந்தோர் எண்ணிக்கையை உறுதி செய்தனர். ஆபத்தான வளைவுகளைக் கொண்ட மானந்தவாடி, விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதியாகும். விபத்து நடந்த இடத்தை வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் விரைவில் பார்வையிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் சாலை விபத்துகள்:
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.
2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.